ரூ.2,000 கோடி லஞ்சம் கொடுத்தாரா அதானி? கைது வாரண்ட் பிறப்பித்த அமெரிக்கா நீதிமன்றம்
அதிகாரிகளுக்கு 2000 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதானிக்கு அமெரிக்கா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
கெளதம் அதானி
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யத்தில் ஒன்று அதானி குழுமம். அதானி குழுமங்களின் தலைவர் கெளதம் அதானி இந்தியாவின் 2வது பணக்காரராக உள்ளார்.
சமையல் எண்ணெய் உற்பத்தி தொடங்கி சோலார் மின்சாரம் உற்பத்தி, எரிவாயு உற்பத்தி, உணவு உற்பத்தி, சிமெண்ட் உற்பத்தி, கிரிக்கெட் அணி, ஊடகங்கள், துறைமுகம், விமான நிலையங்கள் நிர்வாகம் என பல துறைகளில் அதானி குழுமம் கால் பதித்துள்ளது.
அதிகாரிகளுக்கு லஞ்சம்
அமெரிக்காவில் சூரிய சக்தி திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கெளதம் அதானி குழுமம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. கெளதம் அதானி, சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் 265 மில்லியன் டாலர்களை லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு வழங்க முன்வந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம், அடுத்த 20 ஆண்டுகளுக்கு, அதானி குழுமத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 16,000 கோடி ரூபாய்க்கும் மேல் லாபம் கிடைக்கும் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்த அமெரிக்க பங்குச்சந்தை முதலீட்டாளர்களை அதானி குழுமம் ஏமாற்றி உள்ளது என அமெரிக்க பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
பிடி வாரண்ட்
அதானி லஞ்சம் தருவது தொடர்பாக தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகாரிகளுடன் சாகர் அதானி தொலைபேசியில் பேசியதற்கான ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, கெளதம் அதானி உள்ளிட்ட 7 பேருக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
அதானி குழுமம் இது தொடர்பாக எந்தவித விளக்கத்தையும் இதுவரை தரவில்லை. இதன் எதிரொலியாக இந்தியா பங்கு சந்தையில் அதானி குழும பங்குகள் சுமார் 20 சதவீதம் சரிவை எதிர்கொண்டது