குரோம் பிரவுசர் விற்பனைக்கு வருகிறதா? கூகிள் நிறுவனத்திற்கு புதிய சிக்கல்
குரோம் பிரவுசரை விற்குமாறு கூகிள் நிறுவனத்தை அமெரிக்கா நீதிமன்றம் நிர்பந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கூகிள் குரோம் பிரவுசர்
உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன், லேப்டாப், டெஸ்க்டாப், டேப்லெட் என டிஜிட்டல் சாதனங்களில் கூகுள் குரோம் இன்டர்நெட் பிரவுசரை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள்.
கூகிள் குரோம் பிரவுசரை 2008 ஆம் ஆண்டு கூகிள் நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தியது. கூகிள் குரோம் பிரவுசர் உலகளவில் பிரௌசர் சந்தையில் 65% பங்கை கொண்டுள்ளது. இந்தியாவில் 89% சந்தை பங்கை கூகிள் குரோம் பிரவுசர் கொண்டுள்ளது.
விற்க நிர்பந்தம்
கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டவிரோதமாகத் தேடல் சந்தையை குரோம் பிரவுசர் மூலம் ஏகபோகமாக்கியது என அமெரிக்க நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். தற்போது, சந்தையில் குரோம் பிரவுசரின் ஏகபோகத்தை கட்டுப்படுத்த அந்த நீதிபதி மூலம் குரோம் பிரவுசரை விற்க சொல்லமாறு அமெரிக்க நீதித்துறை அறிவுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்ட சிக்கல்களை எல்லாம் தாண்டி அரசு தரப்பு இந்த விவகாரத்தில் தீவிரமான நடவடிக்கையை மேற்கொள்ள முயல்வதாக கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் பயனர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.
இவ்வாறு நீதிபதி நிர்பந்தித்தால் கூகிள் அந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் குரோம் கூகுளின் விளம்பர வர்த்தகத்திற்கு முக்கியமானது.