மனித மூளையில் சிப் பொருத்தி சோதனை நடத்த அமெரிக்கா அரசு அனுமதி..!

United States of America
By Thahir May 27, 2023 05:57 PM GMT
Report

உலக பணக்காரரான எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் மனித மூளையில் சிப் பொருத்தி கணினியுடன் இணைத்து, நரம்பியல் தொடர்பான நோய்களுக்கு தொழில்நுட்பம் மூலம் மருத்துவ உதவிகளை வழங்க ஆய்வு நடத்தி வருகிறது.

குரங்குகளின் மூளையில் சிப் பொருத்தி சோதனை 

நரம்பியல் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களும், பக்கவாதம் பார்வை குறைபாடு உள்ளவர்களும் ஸ்மார்ட் போன் கணினி போன்ற ஸ்மார்ட் டிவைஸ்களை எளிதாக பயன்படுத்தும் நோக்கத்துடன் அவர்களது மூளையில் மைக்ரோ சிப்பை பொருத்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

இதன் மூலம் கண் பார்வை, பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சித்து வருகிறது. இதில் பல கட்ட சோதனையில் குரங்குகளின் மூளையில் சிப்பை பொருத்தி நடத்தப்பட்ட பரிசோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டன.

அமெரிக்க அரசு அனுமதி 

இது தொடர்பான ஆய்வறிக்கைகளை அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திடம் நியூராலிங்க் நிறுவனம் சமர்ப்பித்து அடுத்த கட்டமாக மனிதர்களிடம் ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில் மனித மூளையில் மைக்ரோ சிப்பை பொருத்தி சோதிக்கும் ஆய்வுக்கு அமெரிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.

US government approves brain chip

இந்த ஒப்புதலுக்கு அமெரிக்க அரசிடம் நியூராலிங்க் நிறுவனம் பல முறை விண்ணப்பித்து இருந்தது ஆனால் அவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது அனுமதி வழங்கி உள்ளது.

விரைவில் சோதனை 

இது தொடர்பாக நியூராலிங்க் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும் போது, ஒரு நாள் எங்கள் தொழில்நுட்பம் ஏராளமானோருக்கு உதவி செய்ய போவதன் முக்கிய முதல்படி தான் இது.

நியூராலிங்க் குழுவினர் மேற்கொண்ட மிகவும் இன்றியமையாத பணிகளின் காரணமாக அமெரிக்க உணவு மற்றும் மருத்துகள் நிர்வாகம் இந்த அனுமதியை அளித்திருக்கிறது என்று கூறியுள்ளது.

மேலும் மூளையில் உள்ள தகவல்களை ப்ளுடூத் மூலம் மின் பொருட்களுக்கு அனுப்புவது குறித்து மேற்கொள்ளப்படும் சோதனையில் பங்கேற்பவர்களை பதிவு செய்யும் பணிகள் குறித்து கூடுதல் தகவல்கள் விரைவில் அளிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.