ரூ.9 கோடியில் குடியுரிமை; கோல்டு கார்டு விசா - என்னென்ன சிறப்பம்சங்கள்?
ரூ.9 கோடியில் அமெரிக்க குடியுரிமை பெறும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கோல்டு கார்டு விசா
அமெரிக்க குடியுரிமை பெறும் கோல்டு கார்டு விசா திட்டத்தை அதிபர் டொனால்டு ட்ரம்ப், வாஷிங்டனில் நேற்று தொடங்கிவைத்தார்.

அப்போது பேசிய அவர், அமெரிக்காவின் வார்ட்டன், ஹார்வர்டு, எம்ஐடி பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் இந்தியா, சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள், படிப்பை நிறைவு செய்த பிறகு அவரவர் சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றனர்.
புதிய கோல்டு கார்டு விசா திட்டத்தின் மூலம் வெளிநாடுகளை சேர்ந்த திறமையான மாணவ, மாணவியர் நிரந்தரமாக அமெரிக்காவில் தங்கி பணியாற்ற முடியும். இதன்மூலம் அமெரிக்காவுக்கு தேவையான திறன்வாய்ந்த பணியாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கிடைப்பார்கள்.
அதோடு ரூ.9 கோடியில் கோல்டு கார்டு விசா பெறுவதன் மூலம் அமெரிக்க அரசின் கருவூலமும் நிரம்பும். சம்பந்தப்பட்ட அமெரிக்க நிறுவனங்களே விசா கட்டணத்தை செலுத்தி உயர்தொழில்நுட்ப திறன் வாய்ந்த வெளிநாட்டு பணியாளர்களை தக்க வைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
சிறப்பம்சங்கள்
கோல்டு கார்டு விசாவை பெற விரும்பும் தனிநபர்கள் https://trumpcard.gov/ இணையம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விசாவுக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.13 லட்சம். விண்ணப்பதாரர் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்.

அவரிடம் நேர்காணலும் நடத்தப்படும். விண்ணப்பம் ஏற்கப்பட்டால் கோல்டு கார்டு விசா வழங்கப்படும். இந்த விசாவை பெற தனிநபருக்கு ரூ.9 கோடி (10 லட்சம் டாலர்) கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே விசாவை நிறுவனங்கள் பெற ரூ.18 கோடி (20 லட்சம் டாலர்) கட்டணம். கோல்டு கார்டு விசாவை 4 மாதங்களில் பெற முடியும். கோல்டு கார்டு விசா பெற்றவர்களின் மனைவி,
திருமணமாகாத பிள்ளைகளுக்கும் அதே விசா வழங்கப்படும். ஆனால் அனைவருக்கும் தனித்தனியாக விசா கட்டணத்தை செலுத்த வேண்டும். குற்ற வழக்குகளில் சிக்கும் நபர்களின் கோல்டு கார்டு விசா உடனடியாக ரத்து செய்யப்படும். அடுத்த கட்டமாக ட்ரம்ப் பிளாட்டினம் கார்டு விசா அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த விசாவுக்கான கட்டணம் ரூ.45 கோடியாக நிர்ணயிக்கப்படலாம். இதன்படி வெளிநாடுகளை சேர்ந்த தனிநபர்கள், ஓராண்டில் 270 நாட்கள் வரை அமெரிக்காவில் தங்கியிருக்கலாம். இந்த காலத்தில் அவர்கள் ஈட்டும் வருவாய்க்கு வரி செலுத்த தேவையில்லை.