”புகாரை எல்லாம் ரத்து செய்ய முடியாது” - நிரவ் மோடிக்கு கெடுபிடி காட்டும் அமெரிக்க நீதிமன்றம்
தன் மீதான மோசடி புகார்களை ரத்து செய்யக் கோரி வைர வியாபாரி நிரவ் மோடி தொடர்ந்த வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்து லண்டன் தப்பி சென்றார். அவரை நாடு கடத்தி அழைத்து வருவதற்கான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அமெரிக்காவில் மூன்று வைர நிறுவனங்களை நிரவ் மோடி மற்றும் அவரது கூட்டாளிகள் நடத்தி வந்த நிலையில் அவற்றின் பெயரை பயன்படுத்தி பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட பல வங்கிகளில் நிரவ் மோடி பல கோடி ரூபாய் மோசடி செய்து உள்ளார். இந்த நிறுவனங்களை திவாலானதாக அறிவிக்கக் கோரி நியூயார்க் நகரில் உள்ள வங்கி திவால் நீதிமன்றத்தில் நிரவ் மோடி உள்ளிட்டோர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கடன் அளித்தோருக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்ய ரூ.112 கோடியை நிரவ் மோடி உள்ளிட்டோரிடம் இருந்து வசூலிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் மோசடி குற்றச்சாட்டுகள் கூறியதை எதிர்த்து நிரவ் மோடி உள்ளிட்ட மூவரும் நியூயார்க் வங்கி திவால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ஆனால் அவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்து மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.