ஈரான் செய்தி இணையங்களை முடக்கியது அமெரிக்கா காரணம் என்ன?

usblocked irannews
By Irumporai Jun 24, 2021 02:30 PM GMT
Report

ஈரான் அரசுக்கு சொந்தமான பிரஸ் டி.வி., மற்றும் ஏமனின் ஈரான் கூட்டாளியான ஹவுதி இயக்கத்தினரின் அல் மசிரா டி.வி.யும் அமெரிக்காவில்தடை செய்யப்பட்டுள்ளன.

ஈரான் நாட்டின் செய்தி இணையதளங்களை அமெரிக்கா அதிரடியாக முடக்கி உள்ளது. தவறான தகவல்களைப் பரப்புவதாக குற்றம் சாட்டி இந்த நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது.

இதனால் அந்த இணையதளங்களை அமெரிக்காவில் யாரும் பார்க்க முடியவில்லை. அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்த இணைய தளங்களில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதில் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு எப்.பி.ஐ. மற்றும் வர்த்தக துறையின் முத்திரைகளும் பதிக்கப்பட்டுள்ளன.

மேலும் ஈரான் அரசுக்கு சொந்தமான பிரஸ் டி.வி., மற்றும் ஏமனின் ஈரான் கூட்டாளியான ஹவுதி இயக்கத்தினரின் அல் மசிரா டி.வி.யும் தடை செய்யப்பட்டுள்ளன.

ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தத்தை மீண்டும் தொடங்குவதுதொடர்பாக அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையேயான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது சர்வதேச அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து விளக்கி அமெரிக்க அரசின் நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

ஈரான் இஸ்லாமிய ரேடியோ மற்றும் டெலிவிஷன் யூனியன் நடத்துகிற 33 இணைய தளங்களும், ஈராக்கில் ஈரான் ஆதரவு பெற்ற கட்டைப் ஹிஸ்புல்லா இணையதளங்களும் அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஈரான் இஸ்லாமிய ரேடியோ மற்றும் டெலிவிஷன் யூனியன் பயன்படுத்தும் களங்கள் ஒரு அமெரிக்க நிறுவனத்துக்கு சொந்தமானவை.

இதற்காக அமெரிக்க கருவூலத்துறையின் வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இருந்து ஈரான் இஸ்லாமிய ரேடியோ மற்றும் டெலிவிஷன் யூனியன் உரிமம் பெறவில்லை.

மேலும் கட்டைப் ஹிஸ்புல்லா அமைப்பு, அமெரிக்காவால் பயங்கரவாத இயக்கமாக கருதி தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த அமைப்பும் உரிமம் பெறவில்லை. எனவே இந்த இணையதளங்கள் செவ்வாய்க்கிழமை  மதியம் முதல் முடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஈரான் தரப்பில் இருந்து எந்த கருத்தும் உடனடியாக வெளியாகவில்லை.