அமெரிக்கா 50% வரிவிதிப்பு.., தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிவிப்பு

Vijay Donald Trump Thamizhaga Vetri Kazhagam
By Yashini Aug 31, 2025 11:17 AM GMT
Report

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பல பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த முடிவு இந்தியாவின் சுமார் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதிகளைப் பாதிக்கும்.

இதனால் இந்தியாவிலுள்ள பல தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையில் உள்ளன. ஏராளமான மக்களுக்கு வேலைவாய்ப்பு நெருக்கடி ஏற்படும்.

இந்நிலையில், அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு பாதிப்பிலிருந்து தமிழக ஏற்றுமதியாளர்கள் மீட்க நடவடிக்கை தேவை என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

வெளியிட்ட அறிவிப்பு 

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 50 சதவீத வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் தமிழக ஏற்றுமதியாளர்கள் மீள முடியாத அளவிற்கு மிக மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

தங்கள் எதிர்காலம் குறித்த கேள்விகளோடும் கவலைகளோடும் இருக்கும் நெசவாளர்கள். மீனவர்கள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர் ஒவ்வொருவரோடும் தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்தியாவின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் பெருமையாகத் தமிழ்நாடு எப்போதும் இருந்து வருகிறது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் நமது மாநிலம் கிட்டத்தட்ட 10% அளவிற்குப் பங்களிக்கிறது. இது நாட்டின் மிகப் பெரிய ஏற்றுமதி அளவுகளில் ஒன்றாகும். ஜவுளி, ஆடை, தோல் மற்றும் காலணிகள், ஆட்டோமொபைல்கள், ஆட்டோ உதிரி பாகங்கள், இயந்திரங்கள், ரசாயனங்கள், மின்னணுப் பொருட்கள், கடல் உணவு வகைகள், நகைகள் உள்ளிட்டவை வரை தமிழ்நாட்டின் தொழில்கள், லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதோடு, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றுகின்றன.

இந்நிலையில் இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்காவின் 50 சதவீதம் என்ற புதிய வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்துள்ளதால் தமிழக ஏற்றுமதியாளர்கள். தாங்கள் மேற்கொண்டு வரும் ஏற்றுமதித் தொழிலைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏனெனில், வங்கதேசம் உள்ளிட்ட பிற ஆசிய நாடுகள் மீது அமெரிக்கா இந்த அளவிற்கு வரியை விதிக்கவில்லை. இதனால் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மற்ற நாட்டுப் பொருட்களின் விலை குறைவாகவும், அதே நேரத்தில் 50 சதவீதம் வரி விதிப்பிற்கு உட்படுத்தப்பட்ட இந்தியப் பொருட்களின் விலை அதிகமாகவும் இருக்கும்.

வரி அதிகமான காரணத்தினால் அமெரிக்க வணிகர்கள் இந்தியப் பொருட்களை வாங்குவதைத் தவிர்த்து வருகின்றனர். இது தமிழக ஏற்றுமதியாளர்களின் தலையில் விழுந்த மிகப் பெரிய 'இடி' ஆகும்.

இந்த வரி விதிப்பு நடைமுறையால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வேலைகள் ஆபத்தில் உள்ளன. திருப்பூரில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகள், கோயம்புத்தூரில் உள்ள ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள தோல் தொழிற்சாலைகள் மற்றும் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் மீனவர்கள் ஆகியோரின் வருமானம் குறைந்து, தொழிற்சாலைகள் மூடப்பட்டு, நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெறும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்புக்கு உள்ளாகும் அபாயத்தில் உள்ளனர்.

இதனால் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் தமிழ்நாட்டின் இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறு தொழில்முனைவோர் தான் முதலில் பாதிக்கப்படுவார்கள்.

இந்தக் கூடுதல் வரிவிதிப்பு அச்சுறுத்தல், சிறிது காலமாகவே இருந்து வந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். வெளியுறவுக் கொள்கையில் ஒரு முன்முயற்சி எடுத்திருந்தால் இந்தச் சூழ்நிலையைத் தடுத்திருக்க முடியும் என்ற உணர்வை நாம் ஒவ்வொருவரும் பெறுவதைத் தவிர்க்க இயலவில்லை.

'உலகளாவிய தெற்கின் குரல்' என்று ஒன்றிய அரசு பெருமையாகக் கூறிக்கொண்டாலும், அமெரிக்காவின் வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்த உடனே இந்தியத் தொழில்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழ்நாட்டை ஆளுகின்ற திமுக அரசும், ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்க, எந்த அவசரத் திட்டமோ, நிவாரண நடவடிக்கைகளோ அல்லது தொலைநோக்குப் பார்வையோ இல்லாமல். 'முதலீட்டு உச்சி மாநாடுகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றிய வெற்று விளம்பரங்களோடு தன்னை நிறுத்திக்கொண்டுள்ளது.

தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்குக் கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்ட கடல் உணவுகள். 50 சதவீத வரி விதிப்பால் பாதி வழியில் துத்துக்குடிக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வந்த செய்திகள் கவலை அளிக்கின்றன. ஏனெனில் இதில் பாதிக்கப்படுவது தமிழக ஏற்றுமதியாளர்கள் தான்.

எனவே, தொழில் மற்றும் வேலைவாய்ப்பினைப் பாதுகாப்பதற்காக ஒன்றிய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமாகிறது. ஆகவே, ஒன்றிய, மாநில அரசுகளுக்குத் தமிழக வெற்றிக் கழகம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறது.   

  

1. தொழில் துறை, தொழில்முனைவோர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க, விரைவாகவும் தீர்க்கமாகவும் செயல்படக் கூடிய, தொழில் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகளை (குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்து) உள்ளடக்கிய ஒன்றிய-மாநில அளவிலான கூட்டுப் பணிக்குழுவை உருவாக்க வேண்டும்.

2. வரிவிதிப்புக் காரணமாகச் செலவினங்கள் அதிகரிப்பு மற்றும் கொள்முதல் ஆணைகள் (Purchase Orders) ரத்து போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சிறு, குறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்களை ஆதரிப்பதற்காக ஒன்றிய அரசு ஒரு சிறப்பு ஏற்றுமதி நிலைப்படுத்தல் நிதியை உருவாக்க வேண்டும்.

3. பாதிப்பிற்கு உள்ளாகும் தொழிலாளர்களையும் நிறுவனங்களையும் பாதுகாக்க, தமிழக அரசு அவர்களின் ஊதியத்திற்கு உத்தரவாதம் தருவது, மானியக் கடன் வழங்குவது போன்ற நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

4.கடன் வழங்கும் செயல்முறையை எளிதாக்க. பாசல்-3 விதிமுறைகளிலிருந்து MSME நிறுவனங்களை நீக்கி, அதற்கான எளிய வங்கிக் கொள்கையை அறிமுகப்படுத்த வேண்டும்.

5. கூடுதல் வரியால் பாதிக்கப்பட்ட துறைகளில் MSME நிறுவனங்கள் பெற்ற கடனில் 5% தள்ளுபடி வழங்கும் வகையில் ஒன்றிய அரசு ஒரு பிரத்யேக வட்டி மானியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

6. பாதிக்கப்பட்ட அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும் நிலுவையில் உள்ள கடனில் 30% வரை பிணையமில்லாத கடன்களை அனுமதிக்கும் அவசரக் கடன் உத்தரவாதத் திட்டத்தை (ECLGS) மீண்டும் நடைமுறைப்படுத்தி அதனை விரிவுபடுத்த வேண்டும்.

7. வரிவிதிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அவர்கள் வாங்கியிருக்கும் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதிலிருந்து இரண்டு ஆண்டுக்காலத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்.

8. வரிவிதிப்பினால் ஏற்பட்டிருக்கும் சுமையை ஈடுசெய்ய, பருத்தி மற்றும் பிற மூலப் பொருள்களின் மீதான இறக்குமதி வரியைத் தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும்.

9. அமெரிக்காவைத் தவிர பிற நாடுகளுக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்களின் ஏற்றுமதியை அதிகரிக்க ஒரு சிறப்புச் செயல் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும்.

10. ஏற்றுமதியைப் பெருமளவு நம்பியிருக்கும் பல்வேறு துறைகளின் தொழிலாளர்களுக்குத் தற்காலிக நலத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

11. அமெரிக்காவிற்கு அப்பால் ஏற்றுமதிகளைப் பன்முகப்படுத்த MSME நிறுவனங்களுக்கு உதவும் வகையில் சிறப்பு நிதித் தொகுப்பினை ஏற்படுத்த வேண்டும். 

தமிழ்நாட்டின் தொழில்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்களுக்குத் தகுதியான நீதியையும் பாதுகாப்பையும் பெறும் வரை, தமிழக வெற்றிக் கழகம் ஒவ்வொரு மன்றத்திலும் இடைவிடாமல் போராடும் என்பதை நாங்கள் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறோம். நமது மாநிலத்தைச் சுற்றி ஒரு பொருளாதாரக் கேடயம் உருவாக்கப்பட வேண்டும். மேலும் முடிவெடுக்கும் உயர் மட்டங்களில் நமது மக்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும்.

கொரோனா தொற்றுப் பேரதிர்ச்சியின் ஆழமான பாதிப்புகளிலிருந்து நமது தொழில்களும் குடும்பங்களும் இன்னும் மீண்டு வந்து கொண்டிருக்கும் நேரத்தில், நமக்கான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான தேவை முன்னெப்போதையும் விடத் தற்போது அதிகமாக உள்ளது. தமிழ்நாடு தனது மக்களுக்காக உறுதியாக நிற்கும் தலைமையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. 

இந்த உலகளாவிய அரசியலால் தமிழகத் தொழில் துறை நசிந்து போய்விடாமல் பாதுகாக்க வேண்டியது ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கடமையாகும். எனவே பொருளாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் துரிதமாக முன்னெடுத்து, தமிழக ஏற்றுமதியாளர்களையும் ஏற்றுமதி சார்ந்த தொழில்களையும் தொழிலாளர்களையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்துகிறோம்" என கூறியுள்ளார்.