சூடு பிடிக்கும் நகர்ப்புற தேர்தல்..மாநில கட்சிகளுக்கு கெடு விதிக்கும் தேசிய கட்சிகள்

Congress Dmk Admk Bjp Urban local elections
By Thahir Jan 30, 2022 07:58 AM GMT
Report

தேசிய கட்சிகளான காங்கிரஸ்,மற்றும் பாஜகவுக்கு தமிழக மாநில கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தண்ணீர் காட்டி வருகின்றனர்.

பாராளுமன்ற தேர்தல்,சட்டமன்ற தேர்தல் மட்டுமின்றி தற்போது உள்ளாட்சி தேர்தலிலும் தேசி ய கட்சிகள் படாதபாடு படுகின்றனர்.

2011-ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் காங்கிரசுக்கு தி.மு.க. 14 இடங்களை கொடுத்தது. அப்போது மொத்த வார்டுகள் 155 தான். இப்போது வார்டு எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது.

ஆனால் காங்கிரசுக்கு ‘அந்த 14’ மட்டும்தான். வேண்டுமானால் மண்டலத்துக்கு ஒன்று வீதம் 15 இடங்கள் தரலாம் என்று கூறுவதாக கூறப்படுகிறது.

ஆனால் காங்கிரஸ் தரப்பில் சட்டமன்ற தொகுதிக்கு 2 வீதம் 21 சட்டமன்றத்துக்கும் 42 தொகுதிகள் வேண்டும் என்ற கோரிக்கையுடன் பேச்சு வார்த்தையை தொடங்கி இருக்கிறார்கள்.

தி.மு.க. தலைமை அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்களுடன் பேசி முடித்துக்கொள்ளும்படி கூறிவிட்டனர்.

கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் பேசி வருகிறார்கள். 5 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ஒரு மாவட்டத்தில் காங்கிரசுக்கு வெறும் 2 இடங்களை மட்டுமே வழங்க முடியும் என்று கறாராக கூறியிருக்கிறார்கள்.

அதைக்கேட்டு அதிர்ந்துபோன காங்கிரசார் கட்சி தலைமையிடம் சொல்லி அழாத குறையாக ஆதங்கப்பட்டுள்ளார்கள்.

சில மாவட்டங்களில் காங்கிரஸ் எங்கே இருக்கிறது? தரும் இடங்களை வாங்கி வெற்றிபெற வழியை பாருங்கள் என்று கூறி இருக்கிறார்கள். இதனால் நொந்துபோன காங்கிரசார் ‘காங்கிரஸ் கட்சி இல்லாமலா 18 எம்.எல்.ஏ.க்கள், 9 எம்.பி.க்கள் இருக்கிறார்கள்?’ என்று சொல்லிவிட்டு கிளம்பி இருக்கிறார்கள்.

இப்படி ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தகவல்கள் வந்ததை அடுத்து கே.எஸ்.அழகிரி நேற்று இரவு மாவட்ட தலைவர்களுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அதில் இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில தலைமையிடம் சொல்லி ஒப்புதல் பெற்ற பிறகே ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

அ.தி.மு.க.வால் பா.ஜனதாவும் தவிப்புக்குள்ளாகி இருக்கிறது. கூட்டணி உண்டா? இல்லையா? பா.ஜனதாவுக்கு எத்தனை இடங்கள்? மேயர் பதவிகள் உண்டா? என்று கட்சி தொண்டர்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.

பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் தண்ணீர் காட்டிய அ.தி.மு.க. கடைசியில் ஒரு வழியாக நேற்று அழைத்தது. பா.ஜனதா தலைவர்களும் வரிந்து கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள்.

சென்னையில் ஒரு எம்.எல்.ஏ. தொகுதிக்கு 2 இடங்கள் வீதம் 42 வார்டுகள்... நாகர்கோவில், கோவை மேயர் பதவிகள், 20 சதவீத இடங்கள் என்ற அடிப்படையில் நகராட்சிகளில் இடங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்து பேசத்தொடங்கி இருக்கிறார்கள்.

அதை கேட்டதும் என்னது...? 2 மேயர், 20 சதவீத வார்டுகளா...? வாய்ப்பே இல்லை. சென்னையில் 20 இடங்கள் தரலாம். மேயர் பதவிக்கு நாகர்கோவிலை மட்டும் தரலாம் என்று கூறி இருக்கிறார்கள்.

அதற்கு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சம்மதிக்க வில்லை. இதனால் பா.ஜனதாவிலும் தனித்து போட்டியிட பட்டியல் தயாராகி வருகிறது.

அ.தி.மு.க. தரப்பில் சில மாவட்டங்களில் பா.ஜனதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக முடிவை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

இப்போது அ.தி.மு.க. தலைமையும் தனியாக பட்டியல் தயாரிக்கும்படி கேட்டுள்ளது. பா.ஜனதாவுக்கு ஒதுக்க சம்மதித்து இருந்த நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவிக்கும் இரவோடு இரவாக பெண் வேட்பாளர் ஒருவரை தயார்படுத்திவிட்டதாகவும், ஒருவேளை பா.ஜனதா ஒத்துவந்தால் நெல்லை மேயர் பதவியை வழங்கலாம் என்று பேசி இருப்பதாகவும் அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

தனித்து போட்டியிட தைரியமும் இல்லாமல், கூட்டணி கட்சிகளிடம் கூடுதல் இடங்களை கேட்டு வாங்கும் ஆளுமையும் இல்லாமல் இரு தேசிய கட்சிகளும் மத்தளம் போல் மாநில கட்சிகளிடம் அடி வாங்குகின்றன என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.