தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அதிமுக வேட்பாளர் மர்மமான முறையில் மரணம் - காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36-வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் (34) மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
வரும் 19ம் தேதி தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட 36-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட ஜானகிராமன் என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்து தனது பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வந்துக் கொண்டிருந்தார். ஆனால், இன்று அதிகாலை ஜானகிராமன் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜானகிராமனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஜானகிராமனுக்கு யாராவது மிரட்டல் விடுத்தார்களா? அல்லது குடும்ப பிரச்சனை காரணமா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.