மயிலாடுதுறையில் ஒத்தி வைக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல் - என்ன காரணம் தெரியுமா?
மயிலாடுதுறை நகராட்சி 19-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு நடக்கவிருந்த உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதற்காக அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் மயிலாடுதுறை தருமபுரம் சாலையைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரது மனைவி அன்னதாட்சி மயிலாடுதுறை நகராட்சி 19வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இவர் தீவிரமாக கடந்த சில நாட்களாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். நேற்று காலை அன்னதாட்சி அதிமுக தொண்டர்களுடன் வழக்கம் போல வாக்கு சேகரித்துள்ளார். நேற்று தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் அன்னதாட்சி காலை உணவு சாப்பிடாமல் விரதம் இருந்ததோடு மட்டுமல்லாமல் மாலையில் சின்னமாரியம்மன் கோவிலில் நடந்த குத்துவிளக்குப் பூஜையில் அவர் கலந்து கொண்டார். அப்போது அன்னதாட்சிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காகத் அவர்தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்குப் பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர் உயிரிழந்த காரணத்தால் மயிலாடுதுறை நகராட்சி 19வது வார்டில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக நகராட்சி தேர்தல் அதிகாரியான மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் பாலு அறிவித்துள்ளார்.