ஆதார் கார்டு வாங்கி 10 வருடம் முடிந்துவிட்டதா? : அப்போ இது முக்கியம்
இந்தியாவில் ஆதார் நடைமுறைக்கு வந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போது கிட்டத்தட்ட அனைத்துக்கும் ஆதார் முக்கியமாகியுள்ளது.
ஆதாரில் மாற்றம்
இந்த நிலையில் பத்து வருடங்களுக்கு முன்னர் ஆதார் வாங்கியவர்கள் பலர், வேறு முகவரிக்கு மாறி இருக்கலாம் அல்லது வேறு சில மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம்.
ஆனால், அந்தத் தகவல்களை ஆதாரில் பதிவு செய்யாமல் இருப்பார்கள். ஆதாரை ஏதாவது ஒரு அடையாள அட்டையில் இணைக்கும்போதோ, ஏதாவது ஒன்றுக்கு ஆதார் தேவைப்படும்போதோ, மாற்றங்களை பதிவேற்றம் செய்யாததால் பல குழப்பங்கள் ஏற்படுகிறது.
134 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன
மேலும் ஒரு சிலரே ஆதாரில் மாற்றங்களைப் பதிவேற்றம் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், இந்த மாற்றங்களை ஆதாரில் பதிவேற்றம் செய்வது மிகவும் முக்கியம் ஆகும்
இதுவரை இந்தியாவில் 134 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த வருடம், கிட்டத்தட்ட 16 கோடி ஆதார் அட்டைகளில் மாற்றங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஆதாரில் செய்ய வேண்டிய மாற்றங்களை, ஆதார் பதிவு மையத்தில் பதிவு செய்துகொள்ளலாம். ஆதார் மையத்துக்கு செல்ல இயலாதவர்கள், ஆதார் இணைய பக்கத்திலோ, ஆதார் செயலியிலோ `update document' என்பதின்கீழ் தங்களது தகவல்களை மாற்றிக்கொள்ளலாம்.
இந்த மாற்றங்களை பதிவேற்றம் செய்ய பெயர் மற்றும் புகைப்படம் கொண்ட அடையாளச் சான்றும், பெயர் மற்றும் முகவரி கொண்ட முகவரி சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆதாரில் தங்களது தகவல்களை சரிபார்க்க, ஆன்லைனில் ரூ.25 மற்றும் ஆதார் மையங்களில் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் ரேஷன் கடை அல்லது பொதுமக்கள் கூடும் இடங்களில், ஆதாரில் மாற்றங்களைப் பதிவு செய்ய விரைவில் முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.
மென்பொருளை மேம்படுத்தியுள்ளது
இந்த மாற்றங்களை விரைவாகவும், சிக்கல்கள் இல்லாமலும் பதிவு செய்ய UIDAI தங்களது மென்பொருளை மேம்படுத்தி யுள்ளது. மேலும், இந்த மென்பொருளை கடந்த 2 மாதங்களாக 40 கிராமங்களில் செயல்படுத்தி சோதனை செய்துள்ளது.
இந்த சோதனை ஆதார் மென்பொருளின் திறனை சோதிக்க நடத்தப்பட்டது.ஆதாரில் தகவல் மாற்றங்களைப் பதிவேற்றம் செய்வதை மேம்படுத்த, மாவட்ட கலெக்டர் அல்லது மாஜிஸ்திரேட் தலைமையில் மாவட்ட அளவிலான ஆதார் கண்காணிப்பு கமிட்டி உருவாக்கப்படுகிறது என்று UIDAI தெரிவித்துள்ளது.