மகாத்மா காந்தியை விட பெரிய ஆளுமை நடிகை ராக்கி சாவந்த்தான்: பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு
மகாத்மா காந்தியை ஒரு நடிகையுடன் ஒப்பிட்டு பேசி தேச பிதாவை கொச்சைப்படுத்தி பேசியதாக பாஜக தலைவர் மீது கடும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
சமீப காலமாக பாஜக கட்சியினர் சிலரின் பேச்சுக்கள் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகின்றன, அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னவ் மாவட்டத்தில் பங்கார்மாவ் சட்டசபை தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாநில சட்டசபை சபாநாயகர் ஹிருதாய் நாராயண் தீட்சித் கலந்து கொண்டார்.
அப்போது நிகழ்ச்சியில் அவர் பேசியப்போது : எனது கருத்தின்படி எந்த துறை குறித்த புத்தகங்களையும் எழுதுபவர் ஆளுமையாக இருக்க முடியாது. அப்படியென்றால் பல ஆண்டுகளாக நான் குறைந்தபட்சம் 6000 புத்தகங்களையாவது படித்திருக்கிறேன் எனக் கூறினார்.
மேலும், மகாத்மா காந்தி மிகக் குறைவான ஆடைகளைத்தான் அணிந்திருப்பார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அவர் வெறும் வேட்டியை மட்டுமே அணிந்திருப்பார். இப்படியான சூழலில்தான் அவரை இந்த நாடே தேச தந்தை என அழைத்தது.
தங்களுடைய ஆடைகளை குறைப்பதன் மூலம் ஒருவர் பெரியவராகவோ ஆளுமைமிக்கவராகவோ முடியும் என்றால் அவரைவிட குறைவாக ஆடை அணியும் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த்தான், காந்தியை விட மிகப் பெரிய ஆளுமையாக இருந்திருப்பார் என தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
அண்மைக்காலமாக பாஜக தலைவர்கள் தான் என்ன பேசுகிறோம் என தெரியாமலேயே பேசி சர்ச்சையில் சிக்குகிறார்கள் என பரவலாக பேசப்படுகிறது. பாஜக மூத்த தலைவராக இருந்து இவ்வாறு கொச்சையாக பேசியதற்கு ஹிருதாய் நாராயண் தீட்சித்துக்கு கடும் கண்டனங்கள் குவிகின்றன.

இவரது பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தனது கருத்தை தவறாக திரித்து ஊடகங்கள் வெளியிட்டதாகவும் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில்:
மகாத்மா காந்தி குறைவான ஆடைகளை அணிந்தார். நாடு அவரை தந்தை என அழைத்தது. குறைவான ஆடைகளை அணிவதன் மூலம் ராக்கி சாவந்த், காந்தியாகிவிட முடியாது என்றுதான் தெரிவித்தேன் என ட்வீட் போட்டுள்ளார்.
நான் காந்தியை பாராட்டினேனே தவிர அவரை நடிகையுடன் ஒப்பிடவில்லை என்றும் அவர் விளக்கியுள்ளார். ஆனாலும் காந்தியுடன் ராக்கி சாவந்தின் ஒப்பீடு செய்தார் என இணையவாசிகள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.