சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை - டீ குடிக்க சென்ற போது நடந்த செயல்
சென்னை ஐஐடி மாணவி வடமாநில நபரால் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகம்
கடந்த மாதம் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் குற்றவாளியான ஞானசேகரன் என்பவனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.
ஐஐடி மாணவி
நேற்று இதே போல் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 3 பேர் கொண்ட கும்பல் பல்கலைகழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர். மாணவி கூச்சலிட்டதையடுத்து தப்பியோடி விட்டனர்.
இந்நிலையில் நேற்று(14.01.2024) மாலை, சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவி ஒருவர், வேளச்சேரி-தரமணி பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடைக்கு சென்றபோது அங்கு வேலை செய்யும் நபரால் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார்.
அங்கிருந்தவர்கள் உடனடியாக அந்த நபரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த நபர் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரீராம் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை தரப்பிலிருந்து, சென்னை ஐஐடிக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை
சென்னை ஐஐடி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. வளாகத்துக்குள் குடியிருப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தேவையான அனைத்து ஆதரவையும் சென்னை ஐஐடி வழங்குகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.