ஆக்சிஜன் இல்லாததால் மக்கள் உயிரிழப்பது இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் உயர்நீதிமன்றம்

India Death Oxygen Uttar Pradesh
By mohanelango May 05, 2021 05:14 AM GMT
Report

ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் மரணமடைவது இனப்படுகொலைகளுக்கு சமம் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்கம் தீவிரமாக அதிகரித்துள்ளதால் மருத்துவ தேவைகளுக்கான ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் ஆக்சிஜன் உரிய நேரத்தில் கிடைக்காமல் நோயாளிகள் மரணிக்கும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. சமூக ஊடகங்கள் முழுவதும் ஆக்சிஜனுக்கான கோரிக்கை நிரம்பி வழிகிறது. ஆனால் மத்திய அரசு கொரோனா மரணம் தொடர்பான புள்ளி விவரங்களை குறைத்து காட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இது தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் உயிரழந்தது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அப்போது நீதிபதிகள் கூறியது, “ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் இறப்பது எங்களுக்கு வலியை தருகின்றது, இது குற்றச்செயல், இனப்படுகொலைக்கு சமமானது. நாம் எப்படி நம் மக்களை இப்படி சாக விடலாம். 

பொதுவாக சமூக வலைத்தளங்களில் மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள் குறித்து வரும் விமர்சனங்களைக் கொண்டு நாங்கள் எங்கள் உத்தரவுகளைப் பிறப்பிப்பதில்லை.

ஆனால் இந்த பொதுநல வழக்கின் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர்கள் இத்தகைய சமூக ஊடக செய்திகளின் உண்மைத் தன்மையை நம்புகின்றனர். 

அதனால் உடனடியாக இதற்கு தீர்வு நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிடுகிறோம். ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள் குறித்து லக்னோ, மீரட் நிர்வாகம் உடனடியாக விசாரிக்க வேண்டும். அது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். லக்னோ, மீரட் மேஜிஸ்ட்ரேட்கள் அடுத்த விசாரணையில் நேரில் ஆஜராக வேண்டும், என்று நீதிபதிகள் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.