116 பேரின் உயிரை காவு வாங்கிய ஆன்மீக சொற்பொழிவு - யார் இந்த போலே பாபா?
உத்திர பிரதேச மாநிலத்தில் ஆன்மீக உரையை கேட்க கூடிய மக்களின் கூட்ட நெரிசலில் சிக்கி, சுமார் 116 பேர் மரணமடைந்துள்ளார்கள்.
ஹத்ராஸ் சம்பவம்
நேற்று ஜூலை 2-ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸின் மாவட்டத்தின் ஃபுல்ராய் கிராமத்தில் சூரஜ் பால் பெரும்பாலும் ‘நாராயண் சகர் ஹரி என குறிப்பிடப்படும் சாமியார் ஒருவரின் உரையை கேட்க கூடிய மக்களின் கூட்ட நெரிசலில் பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலேயே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என சுமார் 116 பேர் மரணமடைந்துள்ளதாக தற்போதைய தகவல் தெரிவிக்கின்றன. அப்படி இருக்கும் நிலையில், யார் இந்த சூரஜ் பால் அல்லது ‘நாராயண் சகர் ஹரி அல்லது போலே பாபா என்பவரை பற்றிய கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது.
போலே பாபா
உத்திரப்பிரதேசத்தின் எட்டா மாவட்டத்தின் பாட்டியாலி தாலுகாவில் உள்ள பகதூர் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் உளவுத்துறை பணியகத்தின் (IB) முன்னாள் ஊழியர் என்று அவரே சில இடங்களில் தெரிவித்துள்ளதாக தகவல் உள்ளது.
26 ஆண்டுகளுக்கு முன்பு தனது அரசாங்க வேலையை ராஜினாமா செய்து அவர், மதப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். இன்று, மேற்கு உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி உட்பட வட இந்தியா முழுவதும் இவருக்கு மில்லியன் கணக்கான Followers உள்ளனர்.
குறிப்பிடத்தக்க வகையில், பல நவீன மத பிரமுகர்களைப் போலல்லாமல், போலே பாபா சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருக்கிறார். எந்த தளத்திலும் அவருக்கு அதிகாரப்பூர்வ கணக்குகள் இல்லை. சமூகக்கட்டமைப்பின் அனைத்து பிரிவுகளிலும் இவருக்கு செல்வாக்கு கணிசமானதாக இருப்பதாக அவரைப் பின்பற்றுபவர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகாரில் போலே பாபாவின் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டங்களின் போது, பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் பானங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளை தன்னார்வலர்கள் உறுதி செய்கின்றனர்.