“மொத்தமா சிக்கிய 150 கோடி” - உத்திர பிரதேசத்தில், வருமானவரி சோதனையில் சிக்கிய முக்கிய பிரமுகர்!
கான்பூர், கன்னோஜ், மும்பை மற்றும் குஜராத்தில் உள்ள வியாபாரி பியூஷ் ஜெயின் வீடு, தொழிற்சாலை, அலுவலகம், குளிர்பானக் கடை மற்றும் பெட்ரோல் பம்ப் ஆகியவற்றில் வருமானவரி சோதனை நடந்து வருகிறது.
வியாழக்கிழமை (டிசம்பர் 23, 2021) உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் ஒரு தொழிலதிபர் மீது வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கான்பூர், கன்னோஜ், மும்பை மற்றும் குஜராத்தில் உள்ள வாசனை திரவிய வியாபாரி பியூஷ் ஜெயின் வீடு, தொழிற்சாலை, அலுவலகம், குளிர்பானக் கடை மற்றும் பெட்ரோல் பம்ப் ஆகியவற்றில் வருமானவரி சோதனை நடந்து வருகிறது.
மேலும், குறிப்பிட்ட புலனாய்வு பிரிவின் தகவலின் பேரில், அகமதாபாத் ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகத்தின் (டிஜிஜிஐ) அதிகாரிகள் வியாழக்கிழமை கான்பூரில் உள்ள தொழிற்சாலை வளாகம் மற்றும் பான் மசாலா உற்பத்தியாளர் மற்றும் ஒரு விநியோகிஸ்தருக்கு சொந்தமான இடங்களில் சோதனையைத் தொடங்கினர்.
முதலில், வருமான வரித்துறையினர் பணமதிப்பு எண்ணும் இயந்திரத்துடன் ஆனந்தபுரி நகரில் உள்ள பியூஷ் ஜெயின் இல்லத்தை அடைந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,
"சுமார் ரூ.150 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வரி ஏய்ப்பு முக்கியமாக ஷெல் நிறுவனங்கள் மூலம் செய்யப்பட்டது" என கூறினார்.
கன்னோஜில் உள்ள சிப்பட்டியைச் சேர்ந்த பியூஷ் ஜெயின் ஆனந்தபுரியில் வசித்து வருகிறார். இவருக்கு கன்னாஜில் சொந்தமாக வீடு, வாசனை திரவிய தொழிற்சாலை, குளிர்பானக் கடை, பெட்ரோல் பம்ப் உள்ளது.
மும்பையிலும் வீடு, தலைமை அலுவலகம் மற்றும் ஷோரூம் ஆகியவற்றை வைத்திருக்கிறார். மேலும், அவரது நிறுவனங்களும் மும்பையிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன.
கான்பூர், மும்பை மற்றும் குஜராத்தில் ஒரே நேரத்தில் வியாழக்கிழமை காலை தொடங்கிய சோதனைகள் நள்ளிரவில் முடிவடைந்தன.
இந்த சோதனையின் போது 150 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கப் பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
"வருமானம் மற்றும் வரி தொடர்பான ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. எஸ்பிஐ அதிகாரிகளின் உதவியுடன் ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி இன்னும் நடந்து வருகிறது.
இது வெள்ளிக்கிழமைக்குள் முடிவுக்கு வரலாம். மேலும் ஆழமான விசாரணைகளுக்காக அதனை கைப்பற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது" என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.