சர்வதேச விண்வெளி நிலையத்தில் சரி செய்ய முடியாத கோளாறு வரலாம் : ரஷ்யா எச்சரிக்கை
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சரி செய்ய முடியாத கோளாறு ஏற்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இணைந்து கூட்டாக இந்த விண்வெளி நிலையத்தை 1998ல் கட்டமைத்தன. தொடக்கத்தில் 15 ஆண்டுகள் செயல்படுவதற்காகவே வடிவமைக்கப்பட்டது ஆனால் பின்னர் மேம்படுத்தபட்டு தற்போது உபயோகத்தில் உள்ளது.
இந்த நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள கருவி அமைப்புகள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்ட அடுத்த நாளே சரி செய்யமுடியாத கோளாறுகள் தோன்றும் என்று ரஷ்ய விஞ்ஞானி சோலோவ்யோவ் கூறியுள்ளார்.
விண்வெளி நிலையத்தின் ரஷ்யப் பகுதியை கட்டமைக்கும் முன்னணி நிறுவனமான எனர்ஜியா-வின் முதன்மைப் பொறியாளரான சோலோவ்யோவ்ஒரு முன்னாள் விண்வெளி வீரரும் ஆவார். இந்த நிலையில் சர்வதேச ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில்சர்வதேச விண்வெளி நிலையத்தில் காலாவதியான கருவிகள், வன்பொருள்கள் காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சரி செய்ய முடியாத கோளாறுகள் ஏற்படலாம் என்றும் விரைவில் அவற்றை மாற்றுவதற்கான தேவை வரும் என்றும் அவர் கடந்த ஆண்டு எச்சரித்தார்.
விண்வெளி நிலையத்தில் இடம் பெற்றுள்ள 'ஜர்யா கார்கோ மாட்யூல்' என்ற ரஷ்ய அலகில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் காலப்போக்கில் அதிகமாகும் என்று சோலோவ்யோவ் ஆர்.ஐ.ஏ. செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார். 1998ல் ஏவப்பட்ட இந்த அலகு விண்வெளி நிலையத்தில் உள்ள பழமையான அலகுகளில் ஒன்று. பெரிதும் இது சரக்குகளை இருப்புவைக்கவே பயன்படுத்தப்படுகிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் பழையதாகிக்கொண்டிருக்கும் உலோகங்கள் சரி செய்ய முடியாத விளைவுகளை ஏற்படுத்தும். பேரழிவு ஏற்படும். அப்படி ஏற்பட நாம் அனுமதிக்கக் கூடாது என்று ரஷ்யாவின் துணைப் பிரதமர் யூரி போரிசோவ் கடந்த ஏப்ரல் மாதம் அரசுத் தொலைக்காட்சியிடம் கூறினார்.
கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொய்வுகள் காரணமாக 2030ம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையம் செயல்படமுடியாது என்று ராஸ்காஸ்மோஸ் என்ற ரஷ்ய விண்வெளி நிறுவனம் கூறியுள்ளது.