நள்ளிரவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர் ; அடுத்தடுத்து பரபரப்பான நிகழ்வுகள் - இம்ரான் கான் வீட்டில் நடந்தது என்ன?
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக 174 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், அவரின் ஆட்சி கவிழ்ந்து அவர் பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி பாகிஸ்தானில் ஆட்சியமைத்து வந்தது. இந்நிலையில் அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் சிலர் ஆதரவை திரும்ப பெற்றதையடுத்து இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன.
இதனை தொடர்ந்து நேற்றிரவு (சனிக்கிழமை) நடத்தப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு வெற்றி பெற்றதையடுத்து, இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நள்ளிரவின்போது பாகிஸ்தானின் நாடாளுமன்ற அமர்வு மீது தேசிய ஊடகங்கள் அனைத்தும் கவனம் செலுத்தி வந்த அதே நேரத்தில், இம்ரான் கானின் இல்லத்தில் சில ரகசிய செயல்பாடுகள் நடந்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் வாக்கெடுப்பு நடைமுறை ஒத்திவைக்கப்பட்டதற்கு பின்னர், ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்கட்சி உறுப்பினர்களும் கலந்துரையாடல் செய்து கொண்டிருந்தன.
அந்த நேரத்தில் நாட்டின் பிரதமராக இருந்த இம்ரான் கான், அரசு சார்பாக ஒதுக்கப்பட்டிருந்த தமது அலுவல்பூர்வ இல்லத்தில் சட்டம் மற்றும் அரசியல் ஆலோசகர்கள் மற்றும் சில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பை தொடர்ந்து அவர் தமது அமைச்சரவையின் கடைசி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.
மேலும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இம்ரான் கான் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது அரசாங்கத்தை கவிழ்க்க அமெரிக்கா சதி செய்ததாகக் கூறப்படும் ரகசிய ஆவணங்களை காட்ட சில அதிகாரிகள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் தேசிய அவையின் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பிரதமரின் இல்லத்திற்கு வந்திருந்தனர்.
ஆனால் அவர்கள் இருவரும் ஓய்வறையில் காத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்த நிகழ்வுகளுக்கு மத்தியில், இம்ரான் கானின் இல்லத்தில் ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்கியது. அந்த ஹெலிகாப்டரில் இருந்து இரண்டு விருந்தினர்கள் இறங்கினர்.
அசாதாரண பாதுகாப்பு மற்றும் ஆயுதம் ஏந்திய படையினர் சூழ இம்ரான் கானின் வீட்டுக்குள் சென்ற அந்த விருந்தினர்கள் சுமார் 45 நிமிடங்கள் இம்ரான் கானுடன் பேசியுள்ளனர். இந்த சந்திப்பில் என்ன நடந்தது, எதை பற்றி பேசப்பட்டது, இம்ரான் கானை தவிர வேறு யாரேனும் இந்த சந்திப்பில் பங்கேற்றனரா என்பது இதுவரை தெரியவில்லை.
ஆனாலும், இந்த சந்திப்பு குறித்து பின்னர் தனியார் செய்தி நிறுவனத்திடம் நம்பகமான அரசாங்க வட்டாரங்கள் கூறும்போது, இம்ரான் கானுக்கும் நள்ளிரவில் வந்திறங்கிய இரு விருந்தினர்களுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பு இனிமையானதாக இருக்கவில்லை என்று தெரிவித்திருக்கின்றன.
இந்த கூட்டத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு, தமது அரசின் மூத்த ராணுவ அதிகாரி ஒருவரை இம்ரான் கான் நீக்க உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தன்னை சந்திக்க வந்த விருந்தினர்களின் வருகையை பற்றி முன்பே அறிந்ததை போல் காட்டிக்கொண்ட இம்ரான் கானுக்கு, அவர்கள் தெரிவிக்கப்போகும் விஷயங்கள் பற்றிய அவரது கணிப்பும் எதிர்பார்ப்பும் முற்றிலும் தவறானவை போல அமைந்தன.
அந்த அதிகாரிகள் பிரதமர் இல்லத்தில் தன்னை சந்தித்த பிறகு உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவு பிறப்பிக்கக் கூடும். அதன் பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் தனக்கு எதிராக எழுப்பப்படும் குரல்கள் அமைதியாகிவிடும் என்று இம்ரான் கான் நம்பியிருந்ததாக அவரின் நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது தான் உண்மை. மாறாக, அதே சனிக்கிழமை இரவு, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, தலைமை நீதிபதி அதர் மினல்லா, தன்னுடன் பணிபுரியும் நீதிமன்ற ஊழியர்களுடன் நீதிமன்றத்தை அடைந்தார்.
அப்போது, ராணுவ தளபதியை நீக்குவதற்காக இம்ரான் கான் வெளியிட்ட உத்தரவை 'அதிகார துஷ்பிரயோகம்' என அறிவிக்கக் கோரி அட்னான் இக்பால் என்ற வழக்கறிஞர் ஒரு அவசர மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், அரசியல் மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்காக, இம்ரான் கான் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார். ராணுவ தளபதியை பதவி நீக்கம் செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார். பொதுநலன் கருதி அந்த உத்தரவை செல்லாது என அறிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு தயாரிக்கப்பட்ட அதே சமயம், ராணுவத் தளபதியை நீக்குவதற்கான அரசாணை எண் குறிப்பிடப்பட வேண்டிய இடத்தில் அந்த பகுதி காலியாக இருந்தது. இதன் மூலம் பிரதமர் விருப்பம் தெரிவித்த போதிலும், அரசாணை எண் குறிப்பிடப்படாததால் அந்த மனுவை தலைமை நீதிபதி உடனே விசாரிக்க இயலாமல் போனது.
இந்த மனு எப்படி, விரைவாக தயாரிக்கப்பட்டது, அதை ஒரு சாதாரண வழக்கறிஞர் தாக்கல் செய்ய, அந்த மனுவை விசாரிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எப்படி நீதிமன்றத்துக்கு இரவில் வந்தார்? என்ற கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.
இந்த தொடர் பரபரப்பான நிகழ்வுகளுக்கு பிறகு இம்ரான் கான் பிரதமர் இல்லத்தை விட்டு, தமது தனிப்பட்ட இல்லத்துக்குப் புறப்பட்டு சென்றார்.
பதவி விலக மாட்டேன், ஆட்சியை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாக பேசி வந்த இம்ரான் கான், ஹெலிகாப்டரில் தன்னை சந்திக்க வந்த இரு விருந்தினர்களின் வருகைக்குப் பின் எப்படி மனம் மாறினார் என்பது புதிராகவே இருக்கிறது.