ஆப்கானிஸ்தான் போருக்கு அமெரிக்கா எவ்வளவு செலவழித்தது? தாலிபான்களிடம் தோற்றது ஏன்?
ஜார்ஜ் புஷ் காலம் தொடங்கி டிரம்ப் காலம் வரை இரண்டு தசாப்தங்களாக நடந்து வந்த ஆப்கானிஸ்தான் மீதான போருக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
வரும் செப்டம்பர் 11-ஆம் தேதிக்குள் ஒட்டுமொத்த அமெரிக்க படையையும் ஆப்கனில் இருந்து வெளியேற்ற திட்டமிட்டுள்ளது அமெரிக்கா. ஜோபைடனின் இந்த முடிவுக்கு பல்வேறு நாடுகளும் ஏன் அவரது கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதற்கு பதில் அளித்துள்ள ஜோபைடன்.
என்னோடு போகட்டும்:
20 வருடமாக போர் நடக்கிறது, இந்த போரை எதிர்கொள்ளும் 4வது அதிபர் நான். இதே போரை நான் இன்னொரு அதிபருக்கு கடத்தி செல்ல மாட்டேன். என்னோடு இந்த போர் முடியட்டும், முந்தைய அதிபர்கள் செய்த தவறை நானும் செய்ய மாட்டேன். எனக்கு இது வருத்தம் தருகிறது.
ஒசாமா பின் லேடனை கொன்றதோடு அமெரிக்காவின் பணி முடிந்துவிட்டது.ஆப்கானிஸ்தானை மாற்றுவது நம் வேலை இல்லை. ஆப்கானிஸ்தானில் வாழ்நாள் முழுக்க போர் செய்ய முடியாது. என ஜோ பைடன் திட்டவட்டமாக கூறினார்.
அதுமட்டும் அல்ல தலிபான்களை வேரோடு அழிக்கத் அமெரிக்க அரசு, செலவு செய்த பணம் ஏராளம் அதனை தற்போது பார்க்கலாம்.தலிபன்களை எதிர்கொள்ள பில்லியன் டாலர் கணக்கில் அமெரிக்கா பணத்தை வாரி இரைத்தது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை அடக்க அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 2011ஆம் ஆண்டு அதிகபட்சமாக 1,10,000 பேரைத் தொட்டது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் Costs of War Project' என்ற பெயரில் ஆப்கானிஸ்தான் போருக்காக அமெரிக்க அரசு செலவழித்த தொகை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, செப்டம்பர் 11, 2001 முதல் இந்த 20 ஆண்டுகளில், ஆப்கானிஸ்தானில் நடந்த போருக்காக அமெரிக்கா 2.26 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவு செய்துள்ளது.
தலிபான்களை அழிக்க அமெரிக்கா செலவு செய்த இந்த மொத்த தொகையானது, ஜெஃப் பெசோஸ், எலான் மஸ்க், பில் கேட்ஸ் மற்றும் அமெரிக்காவின் 30 பணக்கார கோடீஸ்வரர்களின் நிகர மதிப்புகளை விட அதிகம் என கூறப்படுகிறது
தினசரி ரீதியாக கணக்கிட்டால் இந்த இரண்டு தசாப்தங்களில் ஒவ்வொரு நாளும் 300 மில்லியன் டாலர்கள் என்ற அளவில் ஆப்கானிஸ்தான் போருக்காக அமெரிக்கா செலவிட்டுள்ளது.
அதில் தலிபான்கள் உடனான நேரடி யுத்தத்துக்கு தான் அதிகமான தொகைகளை செலவிட்டு இருக்கிறது அமெரிக்கா. நேரடி சண்டைக்கு செலவிட்ட தொகை மட்டும் 800 பில்லியன் டாலர் என்ற அளவில் உள்ளதாக கூறப்படுகிறது
இதை இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் கடந்த 18 ஆண்டுகளில் சுமார் 60 லட்சம் கோடி ரூபாய் வருகிறது .அதாவது 18 ஆண்டுகள் என்பதால் ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மாற்றம் காணும் .
அது மட்டும் அல்ல அமெரிக்க அமைச்சகங்கள் கணக்கு வழக்குகளை பராமரிக்கும் முறை வித்தியாசமாக இருக்கும் என்பதால் சரியாக எவ்வளவு செலவானது என கணக்கிட்டுச் சொல்வது கடினமானது
ஆப்கானிஸ்தான் போருக்காக அமெரிக்க அரசு கடன் வாங்கித்தான் இந்த தொகைகளை கொடுத்திருக்கிறது. இந்தக் கடனுக்கான வட்டியாக மட்டும் 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை அமெரிக்க அரசு செலுத்தியுள்ளது.
இந்த வட்டி தொகையையும் சேர்த்தே மொத்தம் 2.26 ட்ரில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது பிரவுன் பல்கலைக்கழக குழு. ஆப்கானிஸ்தான் போருக்காக வாங்கிய கடனுக்கான வட்டி மட்டும் 2050-ம் ஆண்டு வாக்கில் 6.5 டிரில்லியன் டாலரை எட்டும் என்றும் மதிப்பிட்டுள்ளனர்.
ஆப்கானில் சறுக்கியதா அமெரிக்க ராணுவம்:
இவ்வுளவு தொகையினை செலவழித்தும் தலிபான்களை முழுமையாக அமெரிக்க அரசினால் அடக்க முடியவில்லை, ஒரு நிலையான ஆப்கானிஸ்தான் ராணுவத்தை மற்றும் போலீஸ் படையை உருவாக்குவதில் அமெரிக்கா தோல்வி அடைந்திருக்கிறது.
அதாவது ஈராக்கில் நடைபெற்றது போர் போல சரியான திட்டமிடல் அமெரிக்க ராணுவத்திடம் இல்லை அதே சமயம் முற்பகுதியில் தலிபன்களை அடக்கியதுமே ஆப்கன் அரசு அமெரிக்க ராணுவத்திற்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை இது போன்ற காரணங்கள்தான் தலிபன்கள் முன்னேறுவதற்கு காரணமாக இருந்ததாக கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.