ஆப்கானிஸ்தான் நிலையை உலகம் கனத்த இதயத்துடன் உற்றுநோக்குகிறது- ஐ.நா

United Nations Afghanistan Taliban
By Thahir Aug 17, 2021 07:11 AM GMT
Report

ஆப்கானிஸ்தானில் வன்முறைக்கு உடனடியாக முடிவு ஏற்படுத்தி, புதிய அரசு அமைவதற்கான பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என ஐ.நா சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தலிபான் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள நிலையில், அதுபற்றி ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம் நடைபெற்றது.

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதன் முக்கியத்துவத்தை உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

அதன்பின்னர் வெளியிடப்பட்டுள்ள தீர்மானத்தில் பேச்சுவார்த்தைகள் மூலம் ஒருங்கிணைந்த, பெண்கள் உட்பட அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய ஒரு அரசை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நிலையை உலகம்  கனத்த இதயத்துடன் உற்றுநோக்குகிறது- ஐ.நா | United Nations Afghanistan Taliban

தற்போது தலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கான் வந்துள்ள நிலையில், மற்ற நாடுகளை அச்சுறுத்தவோ, தாக்குதல் நடத்தவோ கூடாது என்றும் மற்ற நாடுகளில் உள்ள பயங்கரவாத குழுக்களை ஆதரிக்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக கூட்டத்தில் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரஸ், பயங்கரவாதிகளின் சொர்க்கமாக ஆப்கானிஸ்தான் மீண்டும் மாறி விடாமலிருப்பதை சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் நடப்பவற்றை கனத்த இதயத்துடன் உலகம் கண்டு வருவதாகவும் தலிபான்கள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

 ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்களை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தான் அண்டை நாடாக தற்போதைய சூழலில் இந்தியாவுக்கு பெரும் கவலை அளிப்பதாக ஐ.நா. சபைக்கான இந்திய தூதர் கூறினார்.

 ஆப்கானிஸ்தானில் பெண்கள், குழந்தைகள் அச்சத்தில் இருப்பதாகவும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டது.

தோஹா மற்றும் சர்வதேச மன்றங்களில் தலிபான்கள் தங்கள் வாக்குறுதிகளை பின்பற்றவில்லை என்றும் மக்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் ஐ.நா சபைக்கான ஆப்கானிஸ்தான் தூதர் கூறினார்.

 ஆப்கான் மக்களுக்கு ஆதரவளிக்க தயார் என்று பிரான்ஸ் உறுதி அளித்துள்ளது.