10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத் தேர்வு - அதிரடி உத்தரவு
10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத் தேர்வுகள் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா காரணமாக கடந்தாண்டு அனைத்து வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இதனையடுத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 10,11,12 ஆகிய 3 வகுப்புகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் நேற்று முன்தினம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனிடையே இன்னும் கொரோனா சூழலால் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் நடப்பு கல்வியாண்டில் 10, 12-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி அவர்களுக்கான பாடங்கள் நடத்தப்படும் கல்வித்தொலைக்காட்சி, ஆன்லைனில் இருந்து ஒவ்வொரு மாத இறுதியிலும் அலகுத் தேர்வு நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் வாட்ஸ்அப் மூலம் தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும், மாணவர்கள், மாணவியருக்கு தனித்தனி வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி அதில் வினாத்தாளை பதிவிட்டு விடைகளை எழுதி வாங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜூன், ஜூலை மாத பாடங்களை மீண்டும் ஒருமுறை நினைவூட்டிவிட்டு, 50 மதிப்பெண்களுக்கு அலகுத் தேர்வை நடத்த வேண்டும் என்றும், அலகுத் தேர்வுக்கான வினாத்தாளை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் இருந்து பெற்று தேர்வு நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.