“வழுக்கை விழுந்தவர்கள் முடி மாற்று சிகிச்சை பெறலாம், செலவை அரசே ஏற்கும்” - வைரலாகும் தென் கொரிய வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதி

manifesto south korea president election unique election promise
By Swetha Subash Jan 07, 2022 02:27 PM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

உலக தேர்தல் வரலாற்றில் இப்படியொரு வாக்குறுதி கொடுக்கப்பட்டதா என, தேர்தல் வல்லுனர்கள் அலசும் அளவுக்கு ஒரு சம்பவம் தென்கொரியாவில் நடந்துள்ளது.

தென்கொரியாவில் வரும் மார்ச் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வடகொரியா அச்சுறுத்தல், அந்நாட்டின் தொடர் ஆயுத சோதனை, பொருளாதார பிரச்சினைகள், அமெரிக்கா உடனான உறவு உள்ளிட்டவை முக்கியத்துவம் பெறுகின்றன.

இதை மையமாக வைத்து அங்குள்ள கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பாக லீ ஜே மியூங் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.

57 வயதாகும் அவர், ஜியோங்கி மாகாணத்தின் கவர்னராக பொறுப்பில் இருந்துள்ளார். ஜனநாயக கட்சியின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த அவருக்கு தற்போது அதிபர் வேட்பாளர் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

இந்த நிலையில் தலையில் முடி உதிர்ந்து, வழுக்கை விழுந்தவர்கள் அதற்கான முடி மாற்று சிகிச்சை மேற்கொள்ளலாம் என்றும், இதற்கு ஆகும் செலவு தேசிய காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படும் என்றும் லீ ஜே மியூங் தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளார்.

இதன் அடிப்படையில் முடி உதிர்வால் பாதிக்கப்படுபவர்கள் அதிக செலவின்றி சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும். இந்த புதிய வாக்குறுதிக்கு தென்கொரிய மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சமூக வலைதளங்களில் தென்கொரிய மக்கள் லீக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் எதிர்க்கட்சியினர் விமர்சித்துள்ளார்கள்.

இதுதொடர்பாக எதிர்க்கட்சியான தி கன்சர்வேட்டிவின், முன்வா இல்போ பத்திரிகை வெளியிட்டுள்ள தலையங்கத்தில்,

'லீயின் அறிவிப்பு வெளிப்படையாக பார்ப்பதற்கு கவர்ச்சிகரமானதாக தோன்றும். ஆனால், இது முக்கிய பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதை தவிர்த்து விட்டு, அரசின் கஜானாவை காலி செய்யும் விஷயமாகும்.' என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆய்வறிக்கை ஒன்றில், தென்கொரிய மக்களில் 5-ல் ஒருவர், முடி உதிர்தல் பிரச்னைக்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.