அன்றைக்கு மத்திய அமைச்சர்கள் இன்று ஒன்றிய அரசா? குஷ்பு கேள்வி

stalin tweet Kushpusundar
By Irumporai Jun 23, 2021 04:41 PM GMT
Report

அன்று மத்திய அமைச்சர்கள் என  அழைத்த நீங்கள், இன்று ஒன்றிய அரசு என்று அழைப்பதன் பின்னணியில் உள்ள திட்டம் என்ன முதல்வரே என குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் மத்திய அரசு என்று அழைக்காமல் ஒன்றிய அரசு என்றே அழைத்து வருகின்றன. இது தொடர்பாக பாஜக தனது கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறது.

 இந்நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளர் குஷ்பு இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

மன்னிக்கவும் முதல்வரே. இந்தியா மாநிலங்களால் ஆனது அல்ல. மாறாக இந்தியாவால் உருவாக்கப்பட்டவையே மாநிலங்கள். கருத்து சொல்வதற்கு முன்னர் எதையும் வாசித்துப் புரிந்துகொண்டு பேசுங்கள்.

ஆகவே முதல்வரே, இனி நம் தேசத்தை இந்தியா அல்லது பாரதம் என்ற அதன் இயற்பெயர் மூலமே அழைப்பாராக.

அரசியல் ரீதியாகத் துல்லியமாக இருக்க வேண்டும் என நினைத்தால் இந்தியக் குடியரசு என்று வேண்டுமானால் அழைக்கட்டும்.

அனைத்து அரசு ஆவணங்களிலும் அந்தப் பெயர்தானே அதிகாரபூர்வமாக இடம்பெற்றிருக்கிறது.

அப்படியிருக்க மே 2-ம் தேதிக்குப் பின்னர் ஏன் இப்படியோர் அறிவோதயம். மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். மாற்று சிந்தனை வரவேற்கக்கூடியதே.

ஆனால், இங்கே யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ் என்ற வார்த்தையை இருவேறு கோணங்களில் பார்க்கின்றனர். நான் அதைப் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன என்பதாகப் பார்க்கிறேன்.

இந்தியாவாக, பாரதமாக, இந்தியக் குடியரசாகப் பார்க்கிறேன். ஆனால், திமுகவினர் ஒன்றிய அரசு என்கின்றனர்.

டெல்லியில் திமுக அமைச்சர்கள் இருந்தபோது அவர்களை மத்திய அமைச்சர்கள் என்றுதானே அழைத்தனர்.

அதுவும் அத்தனை பெருமிதத்தோடு. ஒன்றிய அமைச்சர்கள் என்று அன்றே அழைத்திருக்கலாமே? இப்போது என்ன ஞானோதயம் வந்துவிட்டது எனத் தெரியவில்லை.

இந்த ஞானம் ஒருவேளை தூரதேசத்தில் தூங்கிக் கொண்டிருந்ததுபோல. நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புவதெல்லாம் இத்தகைய வார்த்தைப் பிரயோகத்தின் பின்னணியில் உள்ள தங்களின் திட்டம் என்னமுதல்வரே என ஸ்டாலினுக்கு குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.