ஒரு ரூபாய்க்கு 29 காசு தான் வருது - மாநில நிதி பகிர்வு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு..!
தமிழகத்திற்கு மத்திய அரசு சரியாக நிதி பகிர்வு அளிக்கவில்லை என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார்.
29 பைசாதான்...
சென்னை வந்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகம் அளித்த வரியை விட கூடுதல் நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக கூறினார். இதற்கு இன்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 2014-15 ஆம் ஆண்டு முதல் 2022-23 ஆம் ஆண்டு வரை தமிழகத்திற்கு மத்திய அரசு ஏறத்தாழ ரூ.4.75 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டார். ஆனால், இதில் ரூ.2.46 லட்சம் கோடி என்பது மத்திய வரிகளில் இருந்து வரி பகிர்வாகவும், மீதமான ரூ.2.28 லட்சம் கோடி என்பது தமிழகத்துக்கு கிடைக்கக்கூடிய மானியங்கள் மற்றும் உதவித்தொகை அடிப்படையில் வழங்கப்பட்டவை என்றார்.
அதேநேரத்தில் நேரடி வரிவருவாயாக தமிழகத்தில் இருந்து ரூ.6.23 லட்சம் கோடி மத்திய அரசு பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கு செல்லும் ஒரு ரூபாய்க்கு மீண்டும் அங்கிருந்து தமிழகத்துக்கு கிடைப்பது 29 பைசாதான் வருகிறது என்று விமர்சித்தார்.
ஆனால், இதே காலகட்டத்தில், 2014 - 15ம் ஆண்டு முதல் 2022 - 23ம் ஆண்டு வரை உத்தரப்பிரதேசத்தில் இருந்து ரூ.2.23 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வரி கிடைத்தால் அம்மாநிலத்துக்கு ரூ.15.35 லட்சம் கோடி திரும்ப கிடைத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
ரூ.20 ஆயிரம் கோடி பற்றாக்குறை
ஜிஎஸ்டி அமல்படுத்தும்போது மாநிலங்களுக்கான வருடாந்திர வளர்ச்சி பங்கு என்பது 14 சதவீதமாக இருக்கும் என்ற நிலையில், ஆனால், அந்த அளவுக்கு வரவில்லை என்றும் இதன் காரணமாக தமிழகத்தின் நிதி ஆளுமைக்கான இழந்திருக்கிறோம் என குறிப்பிட்டார்.
இதன்காரணமாக தமிழகத்தின் நிதி பற்றாக்குறை ரூ.20 ஆயிரம் கோடியாக இருக்கிறது என்ற தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பெற்ற வரியை விட 2 மடங்காக நிதி கொடுத்துள்ளோம் என கூறும் மத்திய அரசு, விலைவாசி உயர்வு, பண மதிப்பு அதிகரிப்பு போன்றவற்றை கருத்தில் கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், மிக்ஜாம் புயல், தென்மாவட்ட வெள்ளம் ஆகியவற்றுக்காக கோரப்பட்ட வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வரை வழங்கவில்லை என்று குற்றம்சாட்டி, மாநில அரசின் நிதியிலே, இதுவரை ரூ.2,027 கோடி வெள்ள நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.