செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்கப்படுமா? ஒன்றிய அரசின் பதில் என்ன?
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி தேவையைவிடவும் மிகக் குறைவாக இருந்து வருகிறது.
தமிழகத்தில் செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான HLL Biotech நிறுவனம் செயல்படாமல் இருந்து வருகிறது. இதனை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என பல தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் செங்கல்பட்டு HLL Biotech நிறுவனத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து HLL Biotech நிறுவனத்தை தமிழக அரசே ஏற்று நடத்த தயாராக இருப்பதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலித்து விரைவில் முடிவு எடுப்பதாக பதிலளித்துள்ளார்.