அமெரிக்கா புதினை 'போர்க் குற்றவாளி' என்பதா? ரஷியா கண்டனம்
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை 'போர்க் குற்றவாளி' என பைடன் அழைப்பது ஏற்புடையதல்ல, மன்னிக்கக்கூடியதும் அல்ல என்று ரஷியா தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை ஒரு போர்க்குற்றவாளி என பகிரங்கமாக அறிவித்தார்.
இதற்கு ரஷிய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, "உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் தனது குண்டுகளால் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்த அமெரிக்க அதிபர், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை 'போர்க் குற்றவாளி' என அழைப்பது ஏற்புடையதல்ல என்று கூறினார்.
முன்னதாக, ‘ரஷிய அதிபர் புதின் ஒரு போர்க் குற்றவாளி' என்ற தீர்மானத்தை ஏக மனதாக அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இந்த நிலையில், அதிபர் பைடனும் புதினை அவ்வாறே கண்டித்து பேசினார்.
உலகத் தலைவர்கள் பலரும், புதினை 'போர்க் குற்றவாளி' எனக் கூறிய நிலையில், அமெரிக்க அதிபர் பைடன் மட்டும் தயக்கம் காட்டினார். அவ்வாறு அழைக்க சில சர்வதேச விசாரணைகள் நடைபெறுவது அவசியம் என்று கூறிவந்தார்.
இந்நிலையில், நேற்று ‘ரஷிய தாக்குதலுக்கு உள்ளான உக்ரேனிய குடிமக்களின் கொடூரமான நிலைமையை’ தொலைக்காட்சி காட்சிகளின் தொகுப்பு வாயிலாக அமெரிக்காவிற்கு காட்டப்பட்டது. இந்த வீடியோவை பார்த்த பின் அதிபர் பைடன் புதினை கடுமையாக தாக்கி அவரை ஒரு 'போர்க் குற்றவாளி' என்று முதன்முறையாக வெளிப்படையாகக் கூறினார்