`இளவரசி லத்திஃபா உயிருடன் இருக்கும் ஆதாரம் இதுவரை காண்பிக்கப்படவில்லை`: ஐ.நா
துபாய் ஆட்சியாளரின் மகள் உயிரோடு இருப்பதற்கான எந்த ஆதாரங்களையும் தற்போதுவரை பார்க்கவில்லை என ஐநா தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸிடமிருந்து இரு வாரங்களுக்கு முன் அதற்கான ஆதாரங்களை கோரியிருந்தது ஐ.நா. துபாய் இளவரசி லத்திஃபா அல் மக்தூம் 2018ஆம் ஆண்டு நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றார்.
பிபிசி பனோரமாவிடம் பகிர்ந்த வீடியோவில், கமாண்டோக்கள் தன்னை படகிலிருந்து இழுத்து சென்று தடுப்புக் காவலில் அடைத்ததாக அவர் தெரிவித்திருந்தார்.அப்போதிலிருந்து அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை. துபாயின் ராஜ குடும்பம், லத்திஃபா பாதுகாப்பாக `வீட்டில் கவனித்து கொள்ளப்படுகிறார்` என்று தெரிவித்திருந்தது.
லத்திஃபாவின் காணொளி, ஐ.நா விசாரணைக்கு வித்திட்டது. கடந்த மாதம் இளவரசி லத்திஃபா உயிரோடு இருக்கிறார் என்பதற்கான ஆதாரத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸிடம் கோரியுள்ளதாக ஐநா தெரிவித்தது. ஆனால் அது தொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லை என வெள்ளிக்கிழமை ஐ.நா தெரிவித்தது .
அதன் செய்தி தொடர்பாளர் ராபர்ட் கொல்விலே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குழுவுடன் ஜெனிவாவில் சந்திப்புகள் நடந்ததாக தெரிவித்தார். ஆனால் லத்திஃபா உயிருடன் உள்ளாரா என்பது குறித்த ஆதாரங்கள் கிடைத்ததா என்று கேட்டதற்கு `இதுவரை இல்லை` என அவர் பதிலளித்தார்.
- பிபிசி தமிழ்