கொரோனா ஏற்படுத்தியுள்ள பேரழிவுகளைத் தீர்க்க இது தான் ஒரே வழி - ஐ.நா பொதுச் செயலாளர்
கொரோனா பேரிடரால் கடந்த ஒன்றரை வருடமாக ஏற்பட்ட ஊரடங்கு, பொது முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் உலகப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான சிறு, குறு தொழில்கள் உலகம் முழுவதும் பாதிப்படைந்துள்ளன. பல்வேறு துறைகளிலும் வேலை இழப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஆனால் இதே காலகட்டத்தில் கோடீஸ்வரர்களின் செல்வ வளம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பல்வேறு ஆய்வு அறிக்கைகள் தெரிவித்து வருகின்றன.
அமெரிக்கா. இந்தியா தொடங்கி பல்வேறு நாடுகளில் கோடீஸ்வரர்கள் கொரோனா காலகட்டத்தில் அளவிற்கும் அதிகமான சொத்துக்களை குவித்துள்ளனர்.
இதனால் கடுமையான ஏற்றத்தாழ்வுகள் உருவாகியுள்ளதாக ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன. இதற்கு அரசுகள் பெரு நிறுவனங்களுக்கு வழங்கிய சலுகைகளே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

அதே சமயம் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அரசாங்கங்களின் வருவாயும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தீர்க்க கோடீஸ்வரர்களின் சொத்துக்கள் மீது wealth tax - செல்வ வரி விதிக்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.
தற்போது இதே கோரிக்கையை ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் முன்மொழிந்துள்ளார். இந்த கொரோனா காலகட்டத்தில் கோடீஸ்வரர்கள் 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு சம்பாதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்க கோடீஸ்வரர்களின் சொத்துக்களின் மீது செல்வ வரி விதிக்க வேண்டும். இதனை உலக நாடுகள் அனைத்தும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதே போன்ற ஒரு திட்டத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் முன்மொழிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் நடைமுறையில் இருந்த செல்வ வரியை பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 2015-ம் ஆண்டு ரத்து செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும் அதற்கான கோரிக்கைகள் எழுந்துள்ளன.