பாஜக எம்எல்ஏவின் கார் அடித்து நொறுக்கப்பட்டதால் பதற்றம்
உத்தரபிரதேசத்தில் பாஜக எம்எல்ஏவின் கார் மீது, விவசாய சங்க தலைவரின் ஆதாரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் புதானா தொகுதி பாஜக எம்எல்ஏ உமேஷ் மாலிக், நேற்று விவசாயி சங்கத் தலைவர் ராகேஷ் திகாயின் சொந்த கிராமமான சிசோலிக்கு சென்றார்.
அங்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, அவரது கார் மீது சேறும், கறுப்பு மையும் வீசப்பட்டன. காரின் கண்ணாடியும் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால், இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

தகவலறிந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்எல்ஏவை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர்.
இதுகுறித்து எம்எல்ஏ உமேஷ் மாலிக் கூறுகையில், 'இந்த சம்பவத்தின் பின்னணியில் ராகேஷ் திகாயின் ஆதரவாளர்கள் உள்ளனர்' என்றார்.
ஆனால், ராகேஷ் திகாயின் மூத்த சகோதரர் நரேஷ் திகைத் கூறுகையில், 'இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது, எம்எல்ஏவின் ஆதாரவாளர்கள் தான்' என்றார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 10க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்து வருகின்றனர்.