“ப்ளீஸ்...போர் பீதியை உருவாக்காதீர்கள்” - மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரைன் வேண்டுகோள்
போர் பீதியை உருவாக்க வேண்டாம் என்று மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்க்கக்கூடாது என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிராகரித்ததை தொடர்ந்து உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வருகிறது.
உக்ரைன் மீது படையெடுப்பதற்காகவே ரஷ்யா தனது படைகளை குவித்து வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதேசமயம் போர் ஏற்படுவதை தடுக்க அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே போர் பீதியை உருவாக்க வேண்டாம் என்று மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் போரின் விளிம்பில் உள்ளது என்ற தவறான கருத்து என்றும், அங்கிருந்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து குடும்பங்களை திரும்பப் பெறுவதற்கான முடிவுகளை அந்நாட்டு தூதரக ஊழியர்கள் எடுத்திருக்க கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் உக்ரைன் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.