உக்ரைன் போரில் அரங்கேறும் ரஷ்யாவின் பாலியல் அத்துமீறல்கள் - பெண் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு
உக்ரைன் போரில் ரஷ்ய வீரர்கள் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதாக அந்நாட்டு பெண் எம்.பி.க்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் தொடர்ந்து 24 நாட்களாக இன்றும் போர் நீடித்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களான தலைநகர் கிவ், கார்கிவ், மரியுபோலில் ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதால் சுமார் 30 லட்சம் உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இருதரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ள நிலையில் போரை நிறுத்தக்கோரி உலகநாடுகள் வலியுறுத்தி வருகின்றன. அதேசமயம் நாளுக்கு நாள் ரஷ்ய வீர்ரகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் உக்ரைன் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
இதனிடையே உக்ரைனின் எதிர்க்கட்சியான ஹோலோஸ் கட்சியின் எம்.பியான லிசியா வெசிலின்கோ அளித்துள்ள பேட்டி ஒன்றில், ரஷ்ய வீரர்கள் பல வயதான பெண்களை கூட பாலியல் வன்புணர்வு செய்ததால், அவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கண்ணீருடன் கூறியுள்ளார். சிலரை ரஷ்ய வீரர்களே கொன்றதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் அல்லது குடும்பத்தினர் எவரும் இந்த கொடுமை பற்றி வெளிப்படையாக பேச முன்வராததால் இந்த சம்பவம் வெளியே தெரியவில்லை என மற்றொரு உக்ரேனிய எம்.பி.யான மரியா கூறியுள்ளார்.