உக்ரைன் அதிபரை கொலை செய்ய வந்த 2 குழுக்களின் முயற்சி முறியடிப்பு - வெளியான அதிர்ச்சி தகவல்
உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியைக் கொலை செய்ய ரஷ்யா 2 குழுக்களை அனுப்பியதாகவும், அக்கொலை முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் உக்ரைன் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்திருக்கிறார். இத்தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 10-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
இந்தப் போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள். நேற்று அதிகாலை தெற்கு உக்ரைனின் எனர்ஹோடர் நகரில் உள்ள சபோரோஷியா அணுமின் நிலையம் மீது ரஷிய படைகள் நேரடியாக குறி வைத்து பயங்கரத் தாக்குதல் நடத்தியுள்ளன.
தற்போது, உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
மக்கள் வெளியேற வசதியாக தற்காலிகமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ம் தேதி ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. அப்போது உக்ரைனின் முக்கிய நகரமான கீவ் மீது வான்வழி, தரை வழியாக பயங்கர தாக்குதலை ரஷ்ய ராணுவம் தாக்கி துவம்சம் செய்தது.
அப்போது, உடனே நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று உக்ரைன் அதிபருக்கு அமெரிக்கா கூறியது. நான் உயிர் விட்டாலும், இந்த மண்ணில்தான் உயிரை விடுவேன் என்று அமெரிக்காவின் வேண்டுகோளை அவர் ஏற்க மறுத்து விட்டார்.
இந்நிலையில், ரஷ்யாவின் கொலைக் குழுவின் தாக்குதல் நடத்தப்படும் என்பதற்காக செலன்ஸ்கி பதுங்கு குழிகளில் இருந்து கொண்டு செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
ரஷ்ய உறவுத்துறையில் உள்ள போருக்கு எதிரான குழுவால் செலன்ஸ்கி இந்த கொலைத் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக, உக்ரைன் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் செயலர் அலெக்சி டேனிலோவ் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
என் மீது தான் ரஷ்யா முதல் குறி வைத்துள்ளதாக கடந்த வாரம் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், உக்ரைன் அதிபரைக் கொல்லும் திட்டத்திற்கு புடினின் நண்பர் வாக்னர் குழுவுடன் சேர்ந்து திட்டம் தீட்டி வருவதாகவும், செச்சன்யாவில் ரஷ்யாவுக்குப் போர் புரிந்த ஒரு குழுவும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், செச்சன் குழுவினரின் கொலை முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், அவர்கள் உக்ரைன் படையினரால் கொலை செய்யப்பட்டதாகவும் டேனிலோவ் தெரிவித்திருக்கிறார்.
கொல்லப்பட்டவர்களில் ரஷ்யாவின் செச்சன்ய தளபதி மகமது துசாயேவும் ஒருவர் என்பதை டேனிலோவ் தெரிவித்திருக்கிறார்.