‘வீரத்துடன் களத்தில் இறங்கிய பொதுமக்கள்’ - ரஷ்ய படைகள் முன்னேறாமல் தடுத்த அணுமின் நிலைய ஊழியர்கள்
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 7-வது நாளாக தாக்குதல் நடைபெற்று வருகிறது.
நேற்று உக்ரைனில் உள்ள மரியபோல் நகரில் ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இந்தப் போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள். இன்று சைடோமிர் நகரிலுள்ள குழந்தை மகப்பேறு மருத்துவமனை உள்ளிட்ட 10 கட்டிடங்கள் மீது ரஷ்ய படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி உள்ளது.
இத்தாக்குதலில் மருத்துவமனையில் இருந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 16 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக மருத்துவமனையில் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கீவ் நகரில் ரஷ்ய படைகள் முன்னேறாமல் தடுக்க சேதத்திற்கு உள்ளான ரஷ்ய வாகனங்களை கொண்டு, தடைகளை பொதுமக்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
ஸ்ப்போரிஷ்யா அணுமின் நிலையத்தை ரஷ்ய படைகள் கைப்பற்ற போவதாக தகவல் வெளியானதையடுத்து, ரஷ்ய படைகள் அங்கு முன்னேறாமல் இருக்க சாலைகளில் அணுமின் நிலைய ஊழியர்கள் மனித கேடயமாக திரண்டுள்ளனர். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.