உக்ரைன் வீரரை புறக்கணித்த சம்பவம் - புடினின் ‘Z' முத்திரை பதிந்த டி-சர்ட் - முகம் சுளிக்க வைத்த ரஷ்ய வீரர்
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இந்தப் போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள்.
இதனையடுத்து, மாணவர்கள் பலர் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி அவரவர் நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில், கத்தார் நாட்டில் தோஹாவில் உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்ட்டிக் போட்டி நடைபெற்றது. ‘பாரலல் பார்ஸ்’ என்று சொல்லப்படும் பிரிவின் கீழ் இப்போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த இலியா கோவ்டுன் தங்கப் பதக்கத்தை வென்றார். கசாக்ஸ்தான் நாட்டைச் சேர்ந்த மிலாட் கரிமி வெள்ளிப்பதக்கத்தை வென்றார். ரஷ்யாவைச் சேர்ந்த இவன் குலியாக் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இந்நிலையில், வெற்றி பெற்ற வீரர்களுக்கு போட்டி முடிந்ததும் பதக்கம் அளிக்கும் விழாவிற்காக வெற்றி பெற்ற வீரர்கள் மேடைக்கு வந்தனர். அப்போது, ரஷ்ய வீரர் இவன் குலியாக், டி-சர்ட்டில் ‘Z’ என்று எழுத்து பொறிக்கப்பட்ட சட்டையை அணிந்துக் கொண்டு வந்தார்.
‘Z' என்ற எழுத்து ரஷ்ய அதிபர் புடின் ஆதவளார்கள் அணிந்து கொள்ளும் முத்திரையாகும். இவரின் செயலால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், ரஷ்ய வீரர் இவன் குலியாக், வெள்ளி பதக்கம் வென்ற கசாக்ஸ்தான் வீரருடன் கை குலுக்கிய இவர், தங்கப் பதக்கம் வென்ற உக்ரைன் வீரரை கண்டுக்கொள்ளாமல் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.