சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க மறுத்தது ரஷ்யா - கொஞ்சம் கொஞ்சமாக உருகுலையும் உக்ரைன் - பதற்றம்
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து 22 ஆவது நாளாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது.
தலைநகர் கீவ்,கார்கீவ்,மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் கடுமையாக நடந்து வருகிறது. ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
வான்வழி, தரை வழி, கடல் வழியாக மும்முனைகளிலிருந்து தாக்குதல்களை ரஷ்ய படை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகிறார்கள்.
உக்ரைனில் சிக்கிக்கொண்ட வெளிநாட்டு மக்கள் அவசர, அவசரமாக அந்தந்த நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் மரியுபோலில் இருந்து வெளியேறும் மக்களை ரஷ்யா படைகள் தடுத்து நிறுத்துவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இதனையடுத்து, மரியுபோல் நகரில் உள்ள சினிமா தியேட்டரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சம் அடைந்து இருந்தனர்.
அந்த தியேட்டர் மீது ரஷியா குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலில் தியேட்டர் முற்றிலும் சேதம் அடைந்து இருப்பதாகவும் அதில் பலர் சிக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அங்கிருந்த மக்களின் கதி என்ன என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்து மரியுபோல் உள்ளூர் கவுன்சில் வெளியிட்ட தகவலில் ரஷிய ஆக்கிரமிப்பாளர்கள் பொதுமக்கள் தஞ்சம் அடைந்த தியேட்டரை அழித்து இருக்கிறார்கள்.
இதை நாங்கள் மன்னிக்கவே மாட்டோம் என்று கண்டனம் தெரிவித்து உள்ளது. ஆனால் தியேட்டர் மீது தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று ரஷியா மறுப்பு தெரிவித்து உள்ளது.
மரியுபோல் நகரில் இதுவரை 2,400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க ரஷ்யா மறுத்துள்ளது. பன்னாட்டு ஒப்பந்தங்களின்படி சர்வதேச நீதிமன்ற உத்தரவை ரஷ்யாவை கட்டுப்படுத்தும் என்று உக்ரைன் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.