பயப்படாதீங்க... தைரியமாக இருங்கள்... நாங்க வருகிறோம் - சிக்கிய மாணவர்களுக்கு இந்திய தூதகரம்
நம்பிக்கை உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 10-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இந்தப் போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள்.
நேற்று அதிகாலை தெற்கு உக்ரைனின் எனர்ஹோடர் நகரில் உள்ள சபோரோஷியா அணுமின் நிலையம் மீது ரஷிய படைகள் நேரடியாக குறி வைத்து பயங்கரத் தாக்குதல் நடத்தியுள்ளன. தற்போது, உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
மக்கள் வெளியேற வசதியாக தற்காலிகமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. எந்த நேரத்தில், எப்போது போர் தொடுக்கப்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்துள்ளனர்.
இதனால், அவசர, அவசரமாக மக்கள் இடம்பெயர்ந்து வருகிறார்கள். சொகுசாக வாழ்ந்த பல கோடீஸ்வரர்கள் கூட, இப்போரால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு நடுத்தெருவிற்கு வந்துள்ளனர்.
10 நாட்களாக போர் நடைபெற்று வருவதால், வெளிநாட்டினர் அந்நாட்டை விட்டு வெளியேற முடியாமல் தத்தளித்து வருகின்றனர். இன்னும் சில நூறு இந்திய மாணவர்கள் அங்கு சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்களை மீட்க இந்திய வெளியுறவுத் துறை தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இருந்தாலும், ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள நகரங்களில் வசிக்கும் மாணவர்களால் ருமேனியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
This was just sent by an Indian student stuck in Sumy, #Ukraine. Please listen @IndiainUkraine. The students are saying they can't wait anymore, they will start a risky journey to the border (hopefully they won't have to) pic.twitter.com/dFPgczRuZG
— Dhanya Rajendran (@dhanyarajendran) March 5, 2022
இதற்கிடையில், ரஷ்ய எல்லைக்கு அருகே உள்ள வடகிழக்கு உக்ரைனில் உள்ள சுமி நகரில் இருக்கும் இந்திய மாணவர்கள் வீடியோ ஒன்றை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு சிக்கியுள்ளோம். இந்தப் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. நாங்கள் உயிர் பிழைப்போமா என்ற பயம் உள்ளதாக அந்த வீடியோவில் பதிவிட்டிருந்தனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
உக்ரைனில் சிக்கி இருக்கும் மாணவர்களை பத்திரமாக வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்தியத் தூதரகம் தனது டுவிட்டரில் பக்கத்தில், "சுமியில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக அழைத்துவரச் சாத்தியமான அனைத்து வழிமுறைகளையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம்.செஞ்சிலுவைச் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளுடன் பாதுகாப்பாக வெளியேறும் வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியர்கள் அனைவரும் பத்திரமாகத் தாயகம் அழைத்து வரும் வரை கட்டுப்பாட்டு அறை தொடர்ந்து இயங்கும். பாதுகாப்பாக இருங்கள். தைரியமாக இருங்கள்" என்று ட்வீட் செய்துள்ளது.
