உக்ரைனிலிருந்து தன் செல்ல நாயுடன் இந்தியா வந்திறங்கிய ரிஷப்கவுசிக் - குவியும் பாராட்டு - நெகிழ்ச்சி வீடியோ
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 9-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
இந்தப் போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள். இதனையடுத்து, மாணவர்கள் பலர் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி அவரவர் நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
இதற்கிடையில், கிழக்கு உக்ரைனில் உள்ள கார்கீவ் தேசிய பல்கலைக் கழகத்தில் சாப்ட்வேர் என்ஜினீயரிங்கில் 3-ம் ஆண்டு படிக்கும் ரிஷப்கவுசிக் என்ற மாணவர், தெருவிலிருந்து மீட்கப்பட்ட ஒரு நாய்க்குட்டியை வாங்கி வளர்த்து வருகிறார்.
ரிஷப் அந்த வளர்ப்பு நாய்க்குட்டியுடன் இந்தியா திரும்ப ஆசைப்படுகிறார். ஆனால், அவருக்கு நாய்க்குட்டியை உடன் அழைத்து செல்ல அனுமதி கிடைக்கவில்லை. இதனால், இந்தியா திரும்ப அவர் மறுத்திருக்கிறார்.
இது குறித்து ரிஷப் கூறுகையில், என் வளர்ப்பு நாயான ‘மகிபூ’வுடன் நான் இந்தியா திரும்ப அனுமதி கிடைக்கவே இல்லை. இதனால், என் நாய்க்குட்டியை இங்கேயே விட்டுவர எனக்கு மனம் கிடையாது. நான் இங்கே இருப்பது ஆபத்துதான். அதை நான் நன்கு அறிவேன். என் நாய்க்குட்டியை இங்கு விட்டுவிட்டு வந்தால் என் நாயை யார் பார்த்துப்பார்? என்று கண்ணீர் மல்க கூறினார்.
மேலும், தனது நாயை அழைத்து வர தேவையான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்று இவர் வெளியிட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில், பல தடைகளை தாண்டி நாயுடன் இந்தியா வந்துள்ளார் ரிஷப்கவுசிக்.
இது குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த அனைவரும் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.