ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன் விண்ணப்பம் - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனின் முக்கிய நகரங்களை குறி வைத்து ரஷ்ய ராணுவ வீரர்கள் பயங்கரமாக சண்டையிட்டு வருகிறார்கள்.
உக்ரைன் - ரஷ்யா போரால் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகிறார்கள்.
இதற்கிடையில் ரஷ்யா- உக்ரைன் இடையே அமைதி பேச்சுவார்த்தையின் முதற்சுற்று நடந்து முடிந்துள்ளது.
உலக நாடுகள் பலவும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. உக்ரைனுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்களையும் இணைத்துக்கொள்ளும்படி உக்ரைன் சார்பில் அதிகாரப்பூர்வமாக விண்ணப்பம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த விண்ணப்பத்தில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியும், நாடாளுமன்ற தலைவரும் கையெழுத்து போட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
27 நாடுகள் அங்கம் வகித்து வரும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு அந்த 27 நாடுகளும் ஒருமனதாக ஒத்துக்கொள்ள வேண்டும். உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு சில நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.