இந்நேரம் நான் மட்டும் அதிபராக இருந்திருந்தால் ரஷ்ய போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன்.... - டிரம்ப் அதிரடி
கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இருதரப்பிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஏராளமான மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
போரை கைவிடுமாறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்தும், பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. உக்ரைன் பகுதியில் அதிக இழப்பை ஏற்படுத்த ரஷ்ய ராணுவம் திட்டமிட்டு போர் தொடுத்து வருகிறது.
பெண்கள் மற்றும் சிறுமிகளை பலாத்காரம் செய்தும் அப்பாவி மக்களை கொன்று குவித்தும் நாசப்படுத்தி வருகின்றனர்.
சமீபத்தில், உக்ரைனில் அதிகப்படியான மனித சடலங்கள் மீட்கப்பட்டன. அந்த சடலங்கள் அனைத்தும் கைகள் கட்டப்பட்ட நிலையில், கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு, அருகில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து, வடமேற்கு ரஷ்யாவின் ஆர்க்காங்கெல்ஸ்க் பகுதியில், `சர்மாட்' என்னும் கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணை சோதனையை ரஷ்யா நேற்று வெற்றிகரமாக செய்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரபூர்வமாக தெரிவித்தது.
சமீபத்தில் எதிரிகள் ஒன்றுக்கு இருமுறை யோசித்துவிட்டு மோதுங்கள் என்று அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்து, உக்ரைனின் நகரமான மரியுபோலில் உள்ள உருக்காலையைத் தவிர, மற்ற அனைத்துப் பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் ரஷ்யா கொண்டு வந்துவிட்டதாக தெரிவித்தார்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பேட்டி கொடுத்தார்.
அந்தப் பேட்டியில் அவர் பேசுகையில், தற்போது ஜோ பைடனுக்கு பதிலாக தான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அடிக்கடி அணு ஆயுத தாக்குதல் எச்சரிக்கை விடுக்காத வண்ணம் செய்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
