2-வது முறையாக குண்டு மழை - உக்ரைன் மத்திய சதுக்கத்தின் மீது ரஷ்ய போர் விமானங்கள் தாக்குதல் - பதற்றம்
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை குறி வைத்து ரஷ்ய ராணுவ வீரர்கள் பயங்கரமாக சண்டையிட்டு வருகிறார்கள்.
உக்ரைன் - ரஷ்யா போரால் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகிறார்கள்.
இதற்கிடையில் ரஷ்யா- உக்ரைன் இடையே அமைதி பேச்சுவார்த்தையின் முதற்சுற்று நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் உள்ள மரியபோல் நகரில் ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. பயங்கரமான துப்பாக்கிச் சத்தத்தால் மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பலர் பீதி அடைந்து வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.
இரு நாட்டு ராணுவ படைகளுக்கும் பலத்த சண்டை நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
அதேபோல், ரஷ்ய படைகள் ஆக்ரோஷமாக தாக்குதலுடன் வேகமாக முன்னேறி சென்றுக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே உக்ரைன் தலைநகர் நகரான கீவ் நகருக்குள் நுழைந்த ரஷ்ய ரணுவப்படை அரசு கட்டிடங்கள், பொதுமக்கள் குடியிருப்புகள், முக்கிய சுற்றுலாத் தளங்கள், எண்ணெய் கிடங்குகள் மீது வெடி குண்டு தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், 2-வது முறையாக உக்ரைனின் பெரிய நகரான கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தின் மீது ரஷ்ய போர் விமானங்கள் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி வருவதாக அம்மாகாணத்தின் ஆளுநர் தகவல் தெரிவித்துள்ளார்.
