உக்ரைனை அடித்து துவம்சம் செய்யும் ரஷ்யா - 14 குழந்தைகள் உட்பட 352 பேர் உயிரிழப்பு - எங்கும் மக்களின் மரண ஓலம்
உக்ரைனின் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்ய ராணுவ வீரர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அதேபோல், மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரஷ்ய படைகள் நுழைந்து 4 முனைத் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் உக்ரைன் நாட்டில் அமைதி சீர்குலைந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து நடத்தப்படும் குண்டு வெடிப்பு சம்பவங்களால் மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டு, பொதுமக்கள் இங்கும், அங்கும் ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. எங்கு பார்த்தாலும் ரத்தக்கறைகளும், கட்டிடங்களுன் இடிபாடுகளும்தான் கிவியில் காணப்படுகிறது.
உக்ரைனிலிருந்து மக்கள் வெளியேறி ருமேனியா, அங்கேரி, போலந்து ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கு சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
உக்ரைனின் ஏராளமான ராணுவ தளங்கள் மற்றும் போர் தளவாடங்களை ரஷ்ய படைகள் அழித்து முன்னேறி வருகிறது.

ரஷ்ய ராணுவ வீரர்களுடன், உக்ரைன் வீரர்கள் கடுமையான சண்டையிட்டு வருகிறார்கள். இந்த போரில் 4,300 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
இத்தகவலை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைக்காட்சி மூலம், நாட்டை காப்பாற்ற வீரர்கள் உத்வேகத்துடன் போராடும்படி கேட்டுக்கொண்டு வருகிறார்.
இதுவரை இந்தப் போரில் 14 குழந்தைகள் உள்பட 352 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 116 குழந்தைகள் உள்பட 1184 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்திருக்கிறது.

