மகப்பேறு மருத்துவமனை மீது ரஷ்ய படை பயங்கர தாக்குதல் - 2 பேர் பலி, 16 பேர் காயம் - உருக்குலையும் உக்ரைன்
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 7-வது நாளாக தாக்குதல் நடைபெற்று வருகிறது.
நேற்று உக்ரைனில் உள்ள மரியபோல் நகரில் ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இந்தப் போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள்.
இரு நாட்டு ராணுவ படைகளுக்கும் பலத்த சண்டை நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அதேபோல், ரஷ்ய படைகள் ஆக்ரோஷமாக தாக்குதலுடன் வேகமாக முன்னேறி சென்றுக்கொண்டிருக்கிறது.
நேற்று, உக்ரைனின் பெரிய நகரான கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தின் மீது ரஷ்ய போர் விமானங்கள் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசியது.
இந்நிலையில், ரஷ்ய ராணுவ படைகள் உக்ரைனின் காவல்துறை அலுவலகங்கள், தொலைதொடர்பு கோபுரங்கள், பாதுகாப்பு அமைச்சக கட்டிடங்கள், அரசின் முக்கிய கட்டிடங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், சைடோமிர் நகரிலுள்ள குழந்தை மகப்பேறு மருத்துவமனை உள்ளிட்ட 10 கட்டிடங்கள் மீது ரஷ்ய படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி உள்ளது.
இத்தாக்குதலில் மருத்துவமனையில் இருந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 16 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக மருத்துவமனையில் தகவல் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனையடுத்து, இன்று 2-வது கட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.