ஐ.நா.சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன்-ரஷ்யா விவகாரம் குறித்த விசாரணை தொடங்கியது
ரஷ்ய படைகளை தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றக் கோரி ஐ.நா.சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணையை இன்று தொடங்கியது.
உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் சில பிராந்தியங்களில் வாழும் சிறுபான்மையினர்கள் மீது உக்ரைன் அரசு அடக்குமுறைகளையும், படுகொலைகளையும் நிகழ்த்தி வருவதாக குற்றம் சாட்டிய ரஷ்யா கடந்த மாதம் 24-ம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தது.
அன்று தொடங்கி இன்று வரை உக்ரைன் மீது ரஷ்யா 12-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

ரஷ்யா தொடுத்துள்ள இந்த போர் 21-ம் நூற்றாண்டில் இதுவரை எந்த உலக நாடுகளும்ம் கண்டிராத போராக மாறி வருகிறது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளையும் மீறி ரஷ்யா இந்தப் போரை உக்ரைன் மீது நடத்தி வருகிறது.
உக்ரைனின் முக்கிய நகரங்களை சின்னாபின்னமாக்கி வரும் ரஷ்ய படைகள் ராணுவ கட்டமைப்புகள் மட்டுமின்றி குடியிருப்புகள், மருத்துவமனைகள்,
பள்ளிகள், வணிக வளாகங்கள் என தாக்குதலை விரிவுபடுத்தி, சர்வதேச கிரிமினல் கோர்ட்டின் வழக்கை எதிர்கொள்ளும் நிலையை தேடிக்கொண்டது.
கடந்த 11 நாள் போரில் இதுவரை 15 லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் கமிஷனர் கூறியுள்ளார்.
இந்நிலையில், ரஷ்ய படைகளை உடனடியாக தங்கள் நாட்டில் இருந்து வெளியேற உத்தரவிடக் கோரியும், போர் நிறுத்தத்தை அறிவிக்கக் கோரியும் நெதர்லாந்தில் உள்ள ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் கடந்த வாரம் உக்ரைன் மனு தாக்கல் செய்திருந்தது.

சர்வதேச நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் தொடங்கிய இந்த மனு மீதான விசாரணையின் போது, உக்ரைன் - ரஷ்யா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உக்ரைன் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை கேட்ட சர்வதேச நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் ரஷ்யா தனது தரப்பு வாதங்களை நாளை முன்வைக்கவும் உத்தரவிட்டுள்ளது.