"உயிரை காப்பாற்றிக் கொண்டு உடனே உக்ரைனை விட்டு வெளியேறுங்கள்” - ரஷ்ய படைகளை எச்சரித்த அதிபர் ஜெலன்ஸ்கி
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனின் முக்கிய நகரங்களை குறி வைத்து ரஷ்ய ராணுவ வீரர்கள் பயங்கரமாக சண்டையிட்டு வருகிறார்கள். இதற்கு உக்ரைன் தரப்பில் இருந்தும் கடும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் - ரஷ்யா போரால் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள்.

நாளுக்கு நாள் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. உக்ரைனின் பிஞ்சு குழந்தைகள், முதியவர்கள் இத்தாக்குதலில் படுகாயம் அடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இது குறித்த செய்திகளும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி உலக மக்களின் நெஞ்சை ரணமாக்கியுள்ளது.
உடனே இந்த போரை நிறுத்துங்கள் என்று உலக மக்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளும் ரஷ்யாவுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் இதுவரை 5300-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு, ரஷ்ய ராணுவத்தின் 191 பீரங்கிகள்,
29 போர் விமானங்கள், 29 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், 816 கவச வாகனங்கள் வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய வீரர்கள் சிலரை போர்க் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது.
இந்த சூழ்நிலையில், உக்ரைனில் உள்ள ரஷ்ய வீரர்கள் உயிரை காப்பாற்றிக் கொண்டு உடனே உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும் என அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.