ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் - உக்ரைன் அதிரடி அறிவிப்பு
ரஷ்யாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
உக்ரைன் தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இதனால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது 3வது நாளாக போர் தொடுத்து வருகிறது.
வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலில் ஏராளமான பாதுகாப்பு படை வீரர்கள், பொதுமக்கள் பலியாகியுள்ளனர். உக்ரைனும் தங்கள் நாட்டைக் காக்க பதிலடி கொடுத்து வருவதால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.
இதனிடையே உக்ரைன் நாட்டுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நேற்று தெரிவித்திருந்தார். ஆனால் உக்ரைன் இராணுவம் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்றும், உக்ரைனை அடக்குமுறையிலிருந்து விடுவிக்க விரும்புகிறோம் என்றும் அவர் நிபந்தனை விதித்திருந்தார்.
இந்நிலையில் போர் நிறுத்தம் மற்றும் அமைதி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்த தகவலின்படி அமைதிப் பேச்சுவார்த்தையை எங்கு, எப்போது நடத்துவது என்பது குறித்து உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆலோசித்து வருவதாக கூறியுள்ளார்.