உக்ரைனில் போருக்கு நடுவே நடந்த திருமணம் - வெடிகுண்டுகள் வெடிக்க கொண்டாட்டம்
உக்ரைனில் ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஒரு தம்பதி திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இதனால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது.
தொடர்ந்து 3வது நாளாக நடைபெறும் இந்த வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலால் இருநாட்டு பாதுகாப்பு வீரர்களும், அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.

இதனிடையே உக்ரைனைச் சேர்ந்த ஸ்வயடோஸ்லாவ் பர்சின், யரினா எரிவா என்ற ஜோடி வரும் மே மாதம் உக்ரைன் தலைநகர் கிவ்வில் உள்ள ஒரு உணவகத்தின் மேல்தளத்தில் டினிப்பர் ஆற்றை பார்த்தவாறு திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் தற்போது அங்கு போர் நடந்து வருவதால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அமைதியான நதி, அழகான விளக்குகள், உணவகத்தின் மேல்தளம் என்று திருமணம் செய்யவிருந்த ஸ்வயடோஸ்லாவ் பர்சின், யரினா எரிவா ஜோடி போருக்கு நடுவே வான்வழி தாக்குதல்களுக்கு மத்தியில் வெடிகுண்டுகளின் சத்தத்த்திற்கு இடையே திருமணம் செய்துள்ளனர்.
உக்ரைன் தலைநகர் கிவ்வில் உள்ள ஒரு ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டுள்ள இந்த ஜோடி இருவரும் நாட்டைப் பாதுகாக்கும் முயற்சியில் சேர உள்ளூர் பிராந்திய பாதுகாப்பு மையத்திற்குச் செல்லத் தயாராகியுள்ளனர்.