அயன்பட பாணியில் போதை மருந்து கடத்திய உகாண்டா நாட்டு பெண் கைது..!
அயன் பட பாணியில் போதை கேப்சூல்களை விழுங்கி கடத்த முயன்ற உகாண்டா நாட்டு பெண்ணை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
சார்ஜாவில் இருந்த கோவை வந்த ஏர் சவுதி விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். ஆனால் அந்த பெண்ணின் நடவடிக்கை அதிகாரிகளை சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது அவர் பின்னலாடை தொழில்துறையினரை சந்திக்க வந்ததாக கூறினார்.
அதே நேரத்தில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தினர்.
அப்போது அந்த பெண் ஏதோ ஒரு மர்ம பொருளை விழுங்கி கடத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் வயிற்றை அதிகாரிகள் ஸ்கேன் செய்து பார்த்தனர்.
அப்போது அவர் போதை மருந்து நிரப்பப்பட்ட கேப்சூல்களை அவர் விழுங்கி இருப்பது உறுதியானது. இதையடுத்து அந்த பெண்ணை கோவை அரசு மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த பெண்ணிற்கு மருத்துவர்கள் இனிமா கொடுத்து கண்காணித்தனர்.இதையடுத்து கேப்சூல்கள் படிப்படியாக வெளியேறினர்.
மொத்தம் 81 கேப்சூல்கள் வயிற்றில் இருந்து வெளியே வந்தன.அவற்றை அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தினர்.
அப்போது கேப்சூல்களில் மெதாம்பெடமைன் போதை மருந்து நிரப்பப்பட்டிருப்பது தெரியவந்தது. 81 கேப்சூல்களில் நிரப்பப்பட்டிருந்த போதை மருந்துகளின் மதிப்பு சுமார் 4 கோடி ரூபாய் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து உகாண்டா நாட்டைச் சேர்ந்த அந்த பெண்ணை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.