ஒலிம்பிக் போட்டிக்கு சென்ற உகாண்டா நாட்டு வீரர் மாயம்
ஒலிம்பிக் போட்டிக்கு சென்ற உகாண்டா நாட்டு வீரர் டோக்கியோவில் மாயமானதை தொடர்ந்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23-ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இதனை முன்னிட்டு அனைத்து நாட்டு வீரர்களும் டோக்கியோவில் உள்ள ஒலிம்பிக் கிராமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் 20 வயதான உகாண்டா பளுதூக்கும் வீரர் ஜூலியஸ் செகிடோலெக்கோ டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் வந்துள்ளார்.
அவர் மேற்கு ஜப்பானின் ஒசாகாவில் உள்ள இசுமிசானோ என்ற நகரத்தில் தங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை.
கொரோனா பரிசோதனைக்காக வீரர்கள் அழைக்கப்பட்ட போது ஜூலியஸ் செகிடோலெக்கோ காணாமல் போனது தெரியவந்தது. மேலும் உகாண்டாவில் வாழ்வது கடினமாக இருப்பதால், ஜப்பானில் தங்கி வேலை செய்ய விரும்புவதாக ஒரு கடிதம் அவர் எழுதி வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.