அதிமுகவில் முன்னாள் அமைச்சர் நீக்கப்பட்டதாக அறிவிப்பால் அதிர்ச்சி - போலீசில் புகார்
முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அதிமுகவில் இருந்து நீக்கம் என போலி அறிக்கை வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருந்த உடுமலை ராதாகிருஷ்ணன் தற்போது உடுமலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், அதிமுக புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
அதிமுக உட்கட்சிப் பிரச்சினை மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் வெடித்த நிலையில் கட்சியில் இருந்து மூத்த தலைவர் அன்வர் ராஜா நீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடந்த செயற்குழு கூட்டத்தில் அதிரடியாக சில திருத்தங்கள் எடுக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு சமூக வலைதளங்களில் அதிமுகவின் தலைமையில் இருந்து ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் கையெழுத்திட்டது போல் உடுமலை ராதாகிருஷ்ணனை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக போலி அதிமுக லெட்டர் பேடு ஒன்று வெளியானது.
இது தொடர்பாக இன்று உடுமலை ராதாகிருஷ்ணன் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். அதில், பொள்ளாச்சியை சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகி அருண்பிரசாத் என்பவர், தன்னை பற்றி பொய்யான வதந்திகளை சட்டத்திற்கு விரோதமாக போலியாக தயார் செய்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.