நீட் தேர்வு ரத்து..முழு பொறுப்பையும் ஏற்கிறேன், ஏமாற்றமாட்டேன் - உதயநிதி ஸ்டாலின்
நீட் தேர்வு ரத்து தொடர்பான விஷயத்தில் முழு பொறுப்பதையும் ஏற்பதாக கூறி, அதில் மக்களை ஏமாற்றமாட்டேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உண்ணாவிரத போராட்டம்
நீட் தேர்வை எதிர்த்து, நாளை தமிழக மாவட்ட தலைநகரங்களில் திமுக மாணவரணி, மருத்துவரணி, இளைஞரணி ஆகியவை சார்பில் கண்டன உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் நிலைப்பாடு, மத்திய அரசின் செயல் போன்றவற்றை கண்டித்து நடைபெறும் இந்த போராட்டம் குறித்து தமிழகத்தின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
முழு பொறுப்பையும் ஏற்கிறேன்
அப்போது, நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பான பொறுப்பை உணர்வதாக குறிப்பிட்டு, நீட் தொடர்பாக கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பேன் என்றும் மக்களை ஏமாற்ற மாட்டேன் என கூறினார்.
மேலும், நாளை நடைபெறவுள்ள போராட்டத்தில் திமுகவின் முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள் என தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் இந்த போராட்டத்தில் தங்களுடன் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.